வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 308 ரன்கள் முன்னிலை
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 308 ரன்கள் எடுத்து முன்னிலை வகிக்கிறது.
நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்யவே இந்திய அணி பேட்டிங்கில் களம் கண்டது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் 6 ரன்களில் அவுட் ஆக, இளம் நம்பிக்கை வீரர் சுப்மன் கில் டக் அவுட் ஆக இந்திய அணியின் டாப் ஆர்டர் படு மோசமாக வீழ்ந்தது. இந்த நிலையில்தான் ஆல் ரவுண்டர்களான அஸ்வினும், ஜடேஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டிக்கு உயிரூட்டினர். அஸ்வின் சதமடித்து டெஸ்ட் கிரிகெட்டில் தான் ஒரு ஜாம்பவான் என்பதை மீண்டும் நிருபித்தார். இரண்டாவது நாளான இன்று 376 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியில் ஹாசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது பேசுபொருளானது.
பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி சொற்பம் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியைக் காட்டிலும் 227 ரன்கள் பின்னடைச் சந்தித்தது. ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தப்போட்டியில் தனது 400 வது சர்வதேச விக்கெட்டினை எடுத்தார் ஜஸ்ப்ரித் பும்ரா.
வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றுத் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜெய்ஸ்வால் 10 ரன்களும், ரோஹித் ஷர்மா 5 ரன்களும், விராட் கோலி 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க மீண்டும் டாப் ஆர்டர் தடுமாறியது. இந்நிலையில் கடந்த இன்னிங்ஸில் டக் அவுட் ஆன சுப்மன் கில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் நாள் முடிவில் 33 ரன்களை எடுத்து களத்தில் இருக்கிறார். ரிஷப் பந்த் 12 ரன்களுடன் களத்தில் இருக்க இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 81 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி வங்கதேச அணியை விட 308 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 400 ரன்கள் வரையிலும் ஆட்டத்தை எடுத்துச் செல்வார்களா இல்லை அதற்கு முன்னதாகவே இந்திய அணி டிக்ளேர் செய்யுமா இல்லை 400 ரன்களுக்குள்ளாக வங்கதேசம் இந்தியாவை சுருட்டி விடுமா என்பது போன்ற பல கேள்விகளுடன் நாளைய போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
What's Your Reaction?