"நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் வேகவேகமாக கட்டிடங்களை திறந்துவைத்து வருகிறோம்.." திமுக அமைச்சரின் ஓபன் டாக்..
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் கட்டி முடிக்கப்பட்ட அரசுக் கட்டிடங்களை வேகவேகமாக திறந்து வைக்க வருகிறோம் என அமைச்சர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையை அடுத்த குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.15.25 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள், அரசுப்பள்ளிக் கட்டிடங்கள் என பல்வேறு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. தொடர்ந்து சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசுக் கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், 300 மாணவர்களுக்கான கட்டிடத்தை ஆயிரம் மாணவர்களுக்கான கட்டிடமாக மாற்றியமைத்துள்ளதாகக் கூறினார்.
இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறக்க வேண்டும் என ரூ.17 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து ஒரு வாரமாக கட்டிடங்கள் திறந்து வைக்கும் வேலையைத் தான் பார்த்து வருகிறோம் எனவும் இதனை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தேர்தல் நெருங்குவதால் பாதாள சாக்கடைப் பணி, மெட்ரோ குடிநீர் திட்டம் உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார். இந்நிலையில், தேர்தல் நெருங்குவதால் பணிகள் தீவிரமடைவதாகக் கூறிய அமைச்சரின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
What's Your Reaction?