துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: சந்திரபாபு நாயுடுக்கு செக் வைத்த இந்தியா கூட்டணியினர்!
இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளாராக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், தனது பதவியை கடந்த ஜூலை 21, 2025 அன்று ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் 17-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பாஜகவிற்கு மக்களவையில் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருந்தது.
NDA சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன்:
அந்த வகையில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக, மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவர் அக்டோபர் 20, 1957 அன்று தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்தவர். வணிக மேலாண்மையில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், தனது அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனசங்கத்தில் தொடங்கினார்.
கடந்த 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தழுவினார்.
தேசிய அளவில் பா.ஜ.க.வின் முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ள ராதாகிருஷ்ணன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பணியாற்றினார். அதன் பிறகு, கடந்த ஜூலை 31, 2024 அன்று மகாராஷ்டிரா ஆளுநராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியான துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திமுகவுக்கு நெருக்கடி: செக்மேட் சந்திரபாபுவுக்கு!
தமிழர் ஒருவர் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், திமுக தனது ஆதரவினை சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கினர். பாஜகவின் முக்கிய பிரமுகர்களும் நேரடியாக திமுகவிற்கு கோரிக்கை வைத்தனர்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியா கூட்டணியினர் ஒருமித்த கருத்துடன் தங்கள் தரப்பு வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியினை அறிவித்துள்ளார்கள்.
சுதர்சன் ரெட்டி ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். தெலுங்கு தேசம் கட்சியானது தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மக்களவையில் 16 உறுப்பினர்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் தெலுங்கு தேசம் கட்சி கொடுத்த ஆதரவினால் தான் பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்துள்ளது என்றால் மிகையல்ல. தற்போது திமுகவுக்கு ஏற்பட்டுள்ள அதே நெருக்கடி ஆந்திர முதல்வர் சந்திரபாவுக்கு வந்துள்ளது.
தன் மாநிலத்தை சார்ந்தவருக்கு ஆதரவு தெரிவிப்பாரா? இல்லை, கூட்டணியின் மாண்பு காக்க கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா கூட்டணியினர், சந்திரபாபு நாயுடுக்கு செக்மேட் வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சுதர்சன் ரெட்டி பின்னணி என்ன?
இந்திய நீதித்துறையின் உயரிய பதவிகளில் ஒன்றாகக் கருதப்படும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் பி. சுதர்சன் ரெட்டி. இவர் ஜூலை 8, 1946 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர், அவர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1971-ல் ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அவர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் சிவில் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளில் வாதாடினார். 1988-ல் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
1995-ஆம் ஆண்டு, சுதர்சன ரெட்டி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் வழங்கிய தீர்ப்புகள் நீதித்துறையின் கவனத்தை ஈர்த்தன. 2005-ல் அவர் கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற சுதர்சன ரெட்டி 2007-ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 2011-ல் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், அவர் பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அவரது தீர்ப்புகள் சட்ட நுணுக்கங்கள் மற்றும் சமூக நீதி குறித்த ஆழமான பார்வையை வெளிப்படுத்தின என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இன்று நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் எப்போது?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான களத்தில் இரு வேட்பாளர்கள் இருப்பதால் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது. அன்றையத் தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைப்பெறும். அன்றையத் தினமே வாக்கு எண்ணிக்கையானது நடைப்பெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
What's Your Reaction?






