பரபரக்கும் திருப்பரங்குன்றம்..! நாளை தீபம் ஏற்றப்படுமா..?

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவால் நாளை தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Nov 23, 2026 - 18:06
பரபரக்கும் திருப்பரங்குன்றம்..! நாளை தீபம் ஏற்றப்படுமா..?

திருக்கார்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும்  திருப்பரங்குன்றம் பரபரப்பாக காணப்படுகிறது.  

திருப்பரங்குன்றத்தில்  திருக்கார்த்திகை  தீபத்  திருநாளில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. இங்குள்ள தீபத்தூணில் தீபம்  ஏற்பட வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதே கருத்தை கூறி வருகின்றன. ஆனால், ஆண்டு தோறும் தீபத் திருநாளில்  திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம்  ஏற்றப்பட்டு வருவதாகவும் அந்த நடைமுறை பின்பற்றப்பட  வேண்டும் என்றும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த   உச்சநீதிமன்றம்  தீபத்  திருநாளில்  மட்டும் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உள்ளது.  

தேவை ஏற்றப் பட்டால், மத்திய  தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்புக்கு அணுகலாம் என்றும் அறிவுறுத்தி  உள்ளது. மேலும் இந்த அனுமதி ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்றும்  இதை ஒரு பாரம்பரிய வழக்கமாகவோ, மத உரிமையாகவோ அல்லது அந்த இடத்தின் மீதான உரிமைக்கான ஆதாரமாகவோ எவரும் கருதக் கூடாது என்றும், கூறியுள்ளது.வரும் ஆண்டுகளில் இதைக் காரணம் காட்டி அனுமதி கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருந்தது.

தீபத்தூண் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் தன்மை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. நில உரிமை மற்றும் வழிபாட்டு உரிமை தொடர்பான பிரதான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாணையை  ஜனவரி 2027-ல்  உச்சநீதிமன்றம் ஒத்தி  வைத்துள்ளது. 

திருக்கார்த்திகை நாளில் தீபம் எற்ற பொதுமக்கள் கூட்டமாகச் செல்ல அனுமதியில்லை என்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று தீபம் ஏற்ற வேண்டும் நிபந்தனை விதித்துள்ளது. 

கோயில் செயல் அலுவலர், தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து தீபம் ஏற்றச் செல்லும் குழுவை மதுரை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. தீபம் ஏற்றப்பட்டதை உறுதி செய்து 3 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

இதற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தல்  மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சூழலால் திருப்பரங்குன்றத்தில்  போலீசார் குவிக்கப்பட்டு  பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தீபத் தூண் பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட எஸ்பி தலைமையில் 5600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை துப்பாக்கி எந்தி போலீசார் சூழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப் பட்டுள்ளனர். 70-க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, சந்தேகம்  ஏற்படும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் பரபரப்பாக காணப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow