கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
தீபாவளிப் பண்டிகையின் போது தனியார் ஆம்னிப் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்திருக்கிறார்.
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தை 4 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்துப் பேசி கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தியதைத் தொடர்ந்து கடந்த தீபாவளி பண்டிகையின்போது புகார்கள் எழவில்லை எனவும் ஆனால் ஆயுத பூஜையின் போது தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளதாகவும் இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் மூலம் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன என்பது போன்ற புகார்கள் இனி வரக்கூடாது என்பதற்காக வரும் 24ம் தேதி தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்துப் பேசி அறிவுரை வழங்க உள்ளதாக அவர் கூறினார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்ட பின்னரும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆயுத பூஜையின் போது பொதுமக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் சோதனை முறையில் இயக்கிப் பார்க்கப்பட்டுள்ளதாகவும் தீபாவளி பண்டிகையின் போதும் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
What's Your Reaction?