களப்பணியில் தீவிரம் காட்டும் திரிஷா... அரசியல் இயக்கம் தொடக்கம்... லோகோ வெளியீடு!

நடிகை திரிஷாவை முன்னிறுத்தி திருநெல்வேலியில் ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Nov 23, 2026 - 17:34
களப்பணியில் தீவிரம் காட்டும் திரிஷா... அரசியல் இயக்கம் தொடக்கம்... லோகோ வெளியீடு!

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து பரபரப்பாகப் பேசப்பட்டு வருபவர் திரிஷா. தவெக ஆட்சியைக் கைப்பற்றி, கடந்த மே மாதம் 10-ம் தேதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் திரிஷா தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் முதலமைச்சராக தேசியக் கொடியேற்றியபோது, அந்த விழாவில் திரிஷா பங்கேற்றது விவாதப் பொருளாக மாறியது.மேலும், திரிஷா தனது தாயாருடன் முதல் வரிசையில் அமர்ந்தபடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சல்யூட் அடித்த காட்சிகளும் வைரலாயின. அதே விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, திரிஷா பற்றிய செய்திகளும் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகின. அரசியல் கோணத்தில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, அரசியல் யூகங்களின் அடிப்படையில் வந்த சில செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு அல்லது இடைத்தேர்தல் நடைபெறும் ஏதாவது ஒரு தொகுதியில் திரிஷா நிறுத்தப்படலாம் என்றும், அவருக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்தப் பரபரப்புக்கு இடையில், நடிகை திரிஷாவை முன்னிறுத்தி 'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' என்ற புதிய நற்பணி மன்றம் மற்றும் அரசியல் இயக்கம் திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால் இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல், பேரவையின் முழக்கம், இலட்சினை வெளியிடப்பட்டுள்ளன. பச்சை நிறப் பட்டுடுத்தி திரிஷா வணக்கம் செலுத்துவது போன்ற இலட்சினை வெளியிடப்பட்டது. "பதவிக்காக அல்ல, தமிழக மக்களின் உரிமைக்காக" என்ற முழக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா திகழ்வதாக நிர்வாகிகள் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து திரிஷா அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும், எதிர்காலத் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழு அமைத்தல், சாதாரண மக்களுக்கு உதவ தனி சட்ட உதவிக் குழுவை உருவாக்குதல், அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் கிடைக்க உதவுதல் போன்ற களப்பணிகளை மேற்கொள்ள ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். குறைகளைத் தெரிவிக்கத் தனி இணையதளம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தலில் திரிஷா போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரை முன்னிறுத்தி புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow