குதிரை பேர விவகாரம்: கெஞ்சிய எடப்பாடி.. கைவிரித்த அமித்ஷா..? திருவண்ணாமலை லீக்ஸ்..!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறிய விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளதாகவும், அதற்கு தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று அமித்ஷா கைவிரித்ததாகவும் வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த விவகாரம் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் சில எம்.எல்.ஏ.க்களிடம் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில், திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொள்வதற்காக சென்னை வந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியதாகவும், அப்போது, அதிமுக எம்.எல்.ஏ.க்களை தவெக தரப்பு அணுகி வருவது தொடர்பான விவரங்களை இபிஎஸ் எடுத்துரைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், எம்.எல்.ஏ.க்களை கட்சி மாறச் செய்வதற்காக பேரம் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தனக்கு பேரம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்த புகாரையும் அவர் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் பேசியதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சிலருக்கு டெல்லி மேலிடத்தில் ஆதரவு இருப்பதாக கட்சிக்குள் எழுந்துள்ள கருத்துகள் குறித்தும் அவர் எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்குமாறு அமித் ஷா அறிவுறுத்தியதாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வலுவான கூட்டணியை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் டெல்லி மேலிடம் நேரடியாக தலையிடாது என அமித் ஷா தெரிவித்ததாகவும், கட்சி தொடர்பான பிரச்னைகளை அதிமுக தலைமை தானாகவே கையாள வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அமித் ஷா உடனான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சந்திப்பில் பேசப்பட்டதாக வெளியாகி இருக்கும் விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
What's Your Reaction?