ரத்த நாள நோய்களுக்கு தீர்வு .... அறுவைச் சிகிச்சையின்றி குணப்படுத்தும் மருத்துவ முன்னேற்றம் !

பெரிய அறுவைச் சிகிச்சையின்றி ரத்த நாள நோய்களுக்கு நவீன எண்டோவாஸ்குலர் சிகிச்சைகள் மூலம் பாதுகாப்பாகவும் விரைவாகவும் சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Aug 12, 2026 - 19:19
ரத்த நாள நோய்களுக்கு தீர்வு .... அறுவைச் சிகிச்சையின்றி குணப்படுத்தும் மருத்துவ முன்னேற்றம் !

தமனிகள், சிரைகள் மற்றும் நிணநீர் நாளங்களைப் பாதிக்கும் நோய்கள், உலகம் முழுவதும் அதிகளவில் உயிரிழப்பையும் உடல் ஊனத்தையும் ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளன. கால்களுக்கு ரத்த ஓட்டம் குறைவது (Pe-ripheral Arterial Disease), பலவீனமடைந்து வீங்குவது (Aortic Aneu-rysm), கரோட்டிட் தமனி அடைப்பு, கருள் சிரைகள் (Varicose Veins), ஆழ்ந்த சிரை  (Deep Vein Thrombosis), மகாதமணி நீரிழிவு நோயால் ஏற்படும் பாதப் புண்கள் போன்றவை, சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கை அல்லது கால் இழப்பு, பக்கவாதம், உயிருக்கு ஆபத்தான நிலை போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் வாஸ்குலர் மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்த நிலையை முற்றிலுமாக மாற்றியுள்ளன. இன்று பெரும்பாலான ரத்த நாள நோய்களுக்கு பெரிய அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே, பாதுகாப்பான, குறைந்த காயத்துடன் கூடிய நவீன சிகிச்சைகளை அளிக்க முடிகிறது.

எண்டோவாஸ்குலர் சிகிச்சை என்றால் என்ன?

'எண்டோவாஸ்குலர் சிகிச்சை" என்பது உடலில் பெரிய வெட்டுக் காயம்  ஏற்படுத்தாமல், ரத்த நாளில் சிறிய துளை மூலம் கேத்தெட்டர், கைடு வயர், பலூன், ஸ்டென்ட் போன்ற நவீன மருத்துவக் கருவிகளை உள்ளே செலுத்தி மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையாகும். பழைய முறையில் பெரிய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய பல நோய்களுக்கு, இன்று இந்த முறையே சிறந்த மாற்றாக உள்ளது. இதனால் வலி குறைவாக இருக்கும். ரத்த இழப்பும் குறையும். மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைவதுடன், நோயாளிகள் மிக விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது.

கால் துண்டிக்கப்பட வேண்டியதில்லை:

கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும் 'பெரிபெரல் ஆர்டீரியல் டிசீஸ்' இன்று மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளிடம் இந்தப் பாதிப்பு அதிகம். இந்நிலையில் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி, மருந்து பூசப்பட்ட பலூன்கள், அதெரெக்டமி, இன்ட்ராவாஸ்குலர் லித்தோட்ரிப்சி, மருந்து வெளியிடும் ஸ்டென்ட்கள் போன்ற நவீன சிகிச்சைகள் மூலம் ரத்த ஓட்டத்தை மீண்டும் சீராக்க முடிகிறது. இதனால், முன்பு தவிர்க்க முடியாததாகக் கருதப்பட்ட கால் துண்டிப்பு அறுவைச் சிகிச்சைகளின் தேவையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

மகாதமனி அன்யூரிஸம்:

மகாதமனி பலவீனமடைந்து வீங்கும் 'அன்யூரிஸம்' மிகவும் ஆபத்தான நோயாகும். இது வெடித்துவிட்டால் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும். இன்று வயிற்றுப் பகுதியில் அன்யூரிஸங்களுக்கு  ஏற்படும் EVAR (Endovascular Aortic Repair), மார்புப் பகுதியில் அன்யூரிஸங்களுக்கு  ஏற்படும்  TEVAR (Thoracic Endovascular Aortic Repair) போன்ற நவீன சிகிச்சைகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறைகளில் பெரிய அறுவைச் சிகிச்சை தேவையில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான சிக்கல்களும் குறையும். நோயாளிகளும் விரைவில் குணமடைகிறார்கள்.

பக்கவாதத்தைத் தடுக்க புதிய சிகிச்சை:

கரோட்டிட் தமனியில் அடைப்பு ஏற்பட்டால், அது பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமையும். இப்போது இந்தப் பிரச்சினைக்கு, நோயாளியை முழுமையாக மயக்காமல், உள்ளூர் மயக்க மருந்துடன் (Local Anaesthesia) சிறிய வெட்டின் மூலம் கரோட்டிட் எண்டார்டெரெக்டமி அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் அறுவைச் சிகிச்சையின்போது பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதோடு, இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கல்களும் கணிசமாகக் குறைகின்றன.

சுருள் சிரைகளுக்கும் எளிய தீர்வு:

சுருள் சிரைகள், ஆழ்ந்த சிரை ரத்த உறைவு போன்ற பிரச்சினைகளுக்கும் இன்று நவீன சிகிச்சைகள் கிடைக்கின்றன. எண்டோவீனஸ் லேசர், ரேடியோ ஃப்ரீக்வென்சி அப்லேஷன், மருத்துவ ஒட்டுப்பசை  (Medical Adhesive Closure), வெனஸ் ஸ்டென்டிங் போன்ற சிகிச்சைகள் மூலம் குறைந்த நேரத்தில், குறைந்த வலியுடன், நல்ல அழகியல் பலன்களுடன் சிகிச்சை பெற முடிகிறது.

பாதுகாப்பான சிகிச்சை:

இன்றைய வாஸ்குலர் மருத்துவத்தில் டூப்ளெக்ஸ் அல்ட்ராசவுண்ட், சி.டி. ஆஞ்சியோகிராபி, எம்.ஆர். ஆஞ்சியோகிராபி உள்ளிட்ட அதிநவீன பரிசோதனைகள் நோயின் தன்மையை மிகத் துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன. இதனால் சிகிச்சையைத் திட்டமிடுவதும், பாதுகாப்பாக மேற்கொள்வதும் மிகவும் எளிதாகியுள்ளது.

எதிர்காலம்:

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோ உதவியுடன் செய்யப்படும் சிகிச்சைகள், உடலில் கரையும் ஸ்டென்ட்கள், நோயாளியின் உடல்நிலைக்கேற்ப தனிப்பயன் சிகிச்சைகள் போன்றவை, எதிர்கால வாஸ்குலர் மருத்துவத்தை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், திறந்த அறுவைச் சிகிச்சையும் எண்டோ வாஸ்குலர் சிகிச்சையும் ஒரே இடத்தில் செய்யக்கூடிய 'ஹைபிரிட் ஆபரேஷன் தியேட்டர்கள்' மூலம், ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான சிகிச்சையைத் தேர்வு செய்ய முடிகிறது.

நன்மைகள்:

வாஸ்குலர் மற்றும் எண்டோ வாஸ்குலர் சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த முன்னேற்றங்கள், ரத்த நாள நோய்களுக்கான மருத்துவத்தில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. பெரிய அறுவைச் சிகிச்சையை தவிர்த்து, பாதுகாப்பாகவும் குறைந்த காயத்துடனும் பல சிக்கலான நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலையை இந்த நவீன மருத்துவம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கை, கால் போன்ற அங்கங்களைப் பாதுகாப்பது, பக்கவாதத்தைத் தடுப்பது, ஆயுளை நீட்டிப்பது மட்டுமல்ல; நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்த முடிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow