சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து- முதலமைச்சர் அதிரடி உத்தரவு

மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்

Nov 13, 2024 - 12:47
சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து- முதலமைச்சர் அதிரடி உத்தரவு

சென்னை கிண்டி கலைஞர் சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். 

விக்னேஷ் தாயாருக்கு ஒரு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற கோபத்தில் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கத்திக்குத்து சம்பவத்தால் மருத்துவமனை வளாகமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விக்னேஷ் பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் கத்தியால் குத்தியதால் அவர் இருந்த அறை முழுவதும் ரத்தக்கறையுடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவனையில் ஆய்வு செய்தார். மேலும் கத்திக்குத்தில் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.இந்த நிலையில் மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow