கள்ளழகருக்கு சாதி மண்டகப்படியா..? தடை கோரி மனு...  தலையிட முடியாது என்று சொன்ன ஹைகோர்ட்..!

சித்திரைத் திருவிழாவில் தனியார் மற்றும் சாதிய அமைப்புக்கு சொந்தமான மண்டகப்படிகளுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடைவிதிக்கக் கோரி மனு தாக்கல்.

Apr 2, 2024 - 15:21
Apr 2, 2024 - 16:07
கள்ளழகருக்கு சாதி மண்டகப்படியா..? தடை கோரி மனு...  தலையிட முடியாது என்று சொன்ன ஹைகோர்ட்..!

மதுரை சித்திரைத் திருவிழாவில் தனியார் மற்றும் சாதிய அமைப்புக்கு சொந்தமான மண்டகப்படிகளுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடைவிதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்,  இதில் தலையிடமுடியாது என கூறியுள்ளனர்.

மதுரையில் வரும் 12ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்க உள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. வரும் 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார்.  அதற்கு முன்னதாக அழகர் மலையில் இருந்து மதுரைக்கு வரும் கள்ளழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளுவார். 

மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில், “லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும் சித்திரைத் திருவிழாவின் போது, கட்டணம் பெற்றுக்கொண்டு சில சாதிய அமைப்புக்கு சொந்தமான தனியார் மண்டகப்படிகளுக்கும், தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கும் கள்ளழகரை கொண்டு செல்கிறார்கள். இதனால் மக்களிடையே  வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது. 

ஆகவே இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சாதி ரீதியான தனியார் மண்டகப்படிகள் மற்றும் தனி நபர்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல  தடைவிதிக்க வேண்டும். மேலும், கள்ளழகரை பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிடவேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தரப்பில் சொல்லப்பட்டதற்கு அரசு தரப்பில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில் , “பல நூற்றாண்டுகளாக சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை  483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.  முறையான ஏற்பாடுகளுடன் அனுமதி கோரினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை” என்று பதிலளிக்கப்பட்டது.

அரசு தரப்பின் பதிலுக்குப் பிறகு நீதிபதிகள், தங்கள் உத்தரவில், “சித்திரைத் திருவிழா தென் தமிழகத்தின் மிகப்பெரும் பாரம்பரிய கொண்டாட்டம். மண்டகப்படிகளை அதிகரிப்பது சாமியை தரிசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விதமாகவே அமையும். பல லட்சம் பக்தர்கள் இந்த விழாவிற்கு வருவதால் போதிய வசதிகளையும் பாதுகாப்பையும் அரசு தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். மண்டகப்படி விவகாரத்தில் இதுவரை எந்த புகார்களும் இல்லாததால், அதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow