அரசு பேருந்தின் அவல நிலை.. நடுரோட்டில் படிக்கட்டு கழன்று விழுந்ததால் மக்கள் அச்சம்...
ராஜபாளையத்தில் அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு கழன்று விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முடங்கியார் சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.
சற்று சேதமடைந்தாற் போல் காணப்படும் அந்த பேருந்து மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் பேருந்தாகவும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பேருந்து, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முடங்கியார் நோக்கி சென்று கொண்டிருந்தது. வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த போது பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து சாலையோரம் விழுந்துள்ளது.
அந்த சமயம் படிகட்டு மற்றும் பின் பகுதியில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து ஓட்டுநர் பட்டிக்கட்டை அந்த இடத்திலேயே விட்டு விட்டு பயணிகளை அழைத்து சென்று விட்டார். பயணிகளை இறக்கி விட்டு திரும்ப வரும் போது, சாலையோரம் கிடந்த படிக்கட்டை நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.
நடுரோட்டில் படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம் அரசுப்பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற பாதுகாப்பு இல்லாத பேருந்துகளால் பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால், முறையாக பேருந்துகளை பராமரித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?