வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 6

இனிய சொற்களைப் பேசினில் இனிமையான வாழ்வைப் பெறலாம்.

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 6
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 6

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 6

- மதுகேசவ் பொற்கண்ணன்


சொற்களுக்கு உயிர் இருக்கின்றது. என்னது? உயிரா? சொற்களுக்கா? ஆம் நண்பர்களே!  நாம் பேசும்போது ஏதோ வார்த்தைகள்தானே என்று அள்ளித் தெளித்து  பேசுவதாக எண்ணுகிறோம். ஆனால், அந்த சொற்களுக்கு உயிர் இருக்கின்றது. சொற்கள் உயிருடன், உணர்வுடன், உண்மையுடன் காற்றில் கலந்து உலவி வரும். அது தன் இடத்தை தேடி அடைந்து விடும். அப்படி அடையாவிட்டால் பேசுபவரிடமே அது திரும்பி விடும். தொலைபேசியில் நாம் அழைத்தால், மறுமுனையில் இருப்பவர் அந்த இணைப்பை எடுக்கவில்லை என்றால், அந்த இணைப்பை நாமே துண்டிக்க வேண்டி இருக்கும். அதாவது, அந்த அழைப்பு நம்மிடைமே திரும்பி விடும்.

ஒரு சமயம் புத்தர் தன் சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, வழியில் சிலர் அவரிடம் மலர்களைக் கொடுத்தனர்; அதை அவர்களிடமே திருப்பித் தந்து விட்டார். சிலர் அவர்கள் அவருக்கு இனிப்புகளைத் தந்தனர்; அதையும் திருப்பித் தந்து விட்டார்; ஒரு சிலர் கேலி செய்து, சில தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்; புத்தர் ஏதும் பதில் பேசாமல் புன்முறுவலுடன் நடந்து கொண்டிருக்கிறார். சீடர்களுக்கு ஆச்சரியம்! புத்தரிடம் கேட்கின்றனர், ஏன் உங்களைத் திட்டியவர்களை நீங்கள் திருப்பி ஏதும் சொல்லாமல் வருகிறீர்கள்? -  என்று. அதற்கு புத்தர், என்னிடம் கொடுக்க வந்த மலர்களை இனிப்புகளை என்ன செய்தேன்?  என்றார். கொடுக்க வந்தவர்களிடமே திருப்பி தந்து விட்டீர்கள் என்றார்கள். அப்படியே தான் சிலர் திட்டியதையும்  நான் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கே அதைத் திருப்பித் தந்து விட்டேன்; அது அவர்களுக்கே திரும்பி சென்று விடும்,  என்று பதில் கூறினார் புத்தர். 

ஆம் நண்பர்களே! பேசிய வார்த்தைகளை உரியவர் ஏற்காவிட்டால் அது பேசியவருக்கே திரும்பி வந்துவிடும். அது வாழ்த்தாக இருந்தாலும் சரி! சாபமாக இருந்தாலும் சரி! உங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு  நீங்கள் பேச வேண்டும்.

புத்தர் கூறும் நீதி- சொன்ன சொற்கள் தனக்கே திரும்பி வரும்; நல்ல சொற்கள் நல்லவையாகத் திரும்பி வரும்; தவறானச் சொற்கள்  தீங்காகத் திரும்பி வரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான் ஒரு வார்த்தை வெல்லும்; ஒர் வார்த்தைக் கொல்லும்- என்பார்கள்.

உயிருடன் இருக்கும் சொற்களே நீடித்து நிலைத்து நிற்கும். அதனால் தான் வாழ்த்தும்போது பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! என்று வாழ்த்துகின்றோம். பதினாறு பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று வாழ்த்துகின்றோம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய வார்த்தைகள் இன்றும் உயிர்ப்புடன் இருந்து கொண்டி ருக்கின்றது. என்ன காரணம்? 2000 ஆண்டுகள் ஆனாலும், அந்த வார்த்தைகள் தன்னைத்தானே உயிர்ப்பித்துக் கொண்டு, நிலைத்து நிற்கின்றன. தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், கம்பராமாயணம், வில்லிபாரதம், ஆத்திச்சூடி, ஆசாரக்கோவை, கொன்றைவேந்தன், நீதிநெறி விளக்கம் போன்றவையும்; பகவத் கீதை, பைபிள், குர்-ஆன், தம்ம பதம், குரு கிராந்த் சாஹிப், போன்ற சமய நூல்களும், தேவாரம், திருவாசகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், போன்ற பக்தி இலக்கியங்களும் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அந்த சொற்களில் இருக்கின்ற உயிர்த் தன்மையே காரணம்.

நாம் பேசும் சொற்களை கவனமாகப் பேசுவோம்! நல்ல சொற்களைப் பேசுவோம்! நன்மைகளை அடைவோம்!மகிழ்ச்சியான சொற்களைப் பேசுவோம்! மகிழ்வாக இருப்போம்! பயனுள்ள சொற்களைப் பேசுவோம்! பயன் பெறுவோம்!

இதனையே வள்ளுவர் இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்க் கவர்ந்தற்று  என்கிறார். இனிய சொற்கள் உயிருடன் உலாவி உங்கள் வாழ்க்கைக்கு இனிமையைத் திருப்பித் தரும். கசப்பானச் சொற்கள் அதுவும் உயிர்ப்புடன் உலவி, திரும்பக் கசப்பையே தரும்! எனவே இனிய சொற்களைப் பேசினில் இனிமையான வாழ்வைப் பெறலாம்.

இனிமையாகப் பேசும் நண்பர்களைக் கேளுங்கள், லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் என்பார்கள்.


மதுகேசவ் பொற்கண்ணன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow