தீபாவளி டைம்...3 நாள்ல இத்தனை பேர் பஸ்ல சொந்த ஊருக்கு பயணிச்சிருக்காங்க.. - அரசு வெளியிட்ட புள்ளி விவரம்!
கடந்த மூன்று நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இதுவரை 5,76,358 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னையில் பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று பேருந்துகள், ரயில்களில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால், அக்.29ம் தேதி மாலையில் இருந்தே ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கிளம்பிவிட்டனர். மக்களுக்கு ஏதுவாத சிறப்பு பேருந்து வசதிகளையும் ஏற்படுத்தியது அரசு.
இதன் காரணமாக சென்னையை அடுத்த தாம்பரம், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரேநேரத்தில் அதிக அளவிலான பயணிகள் குவிந்தனர், மேலும் அவர்கள் சிறப்பு பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர்.
கிளாம்பாக்கம் மட்டுமின்றி கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பேருந்து முனையத்தில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டதால், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். அதேநேரம் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில், சிலவை மட்டுமே வேலை செய்ததால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (30.10.2024) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2092 பேருந்துகளும், 2172 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த (28.10.2024 முதல் 30.10.2024) நேற்று நள்ளிரவு 12 மணி வரையில் மொத்தம் 10,784 பேருந்துகளில் 5,76,358 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 1,50,510 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும், கடந்த மூன்று நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இதுவரை 5,76,358 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?