அதிகரித்து வரும் டெஸ்டினேஷன் திருமணம்.. இதுதான் காரணமா?
திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி சமீப காலமாக இளம் திருமண ஜோடிகள் மத்தியிலும் டெஸ்டினேஷன் திருமணம் முறை வரவேற்பினை பெற்று வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

திருமணங்கள் பலவிதம்; டெஸ்டினேஷன் திருமணமும் அவற்றில் ஒருவிதம். கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகைகள் நயன்தாரா, பரினீதி சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் கூட 'டெஸ்டினேஷன் வெட்டிங்' முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள் தான்.
'அட! இதென்ன புது ரகமா இருக்கே? என்று நீங்கள் வியக்கலாம். ஆமாம்! தற்போது மேலை நாடுகளில் வேகமாகப் பரவிவரும் திருமண முறை தான் ”Destination wedding”.
மாப்பிள்ளை அல்லது மணப்பெண்ணின் சொந்த ஊரிலோ / சொந்த பந்தங்கள் எளிதில் வந்து போகக்கூடிய இடத்திலோ திருமணத்தை நடத்தாமல், மணமக்களுக்கும் விழாவுக்கு வரும் உறவினர்களுக்கும் புதுவித அனுபவங்களைத் தரும் சுற்றுலாத்தலங்கள் அல்லது ரிசாட்களில் திருமணத்தை நடத்துவதுதான், இதன் ஹைலைட்!
வழக்கமான மண்டபங்களின் பின்புலத்தில் திருமணம் செய்வதைவிட, புத்துணர்வூட்டும் இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான இடங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கேயே திருமணம் செய்துகொள்ளப் பெரும்பாலான இளசுகள் முடிவு செய்கின்றனர்.
இந்தவகைத் திருமணத்துக்கு அழைக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, விருந்தினர்களோடு மனம் விட்டுப் பேசவும். பொழுதைக் கழிக்கவும் மணமக்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது. பல ரிசாட்களில் அனைத்து ஏற்பாடுகளையும் பேக்கேஜ் முறையில் செய்து கொடுப்பதால், திருமணத்தை முன்னின்று நடத்துபவர்களுக்கு அலைச்சல் மற்றும் மனஅழுத்தம் வெகுவாகக் குறைகிறது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, பாரம்பரியத் திருமணங்களைவிட டெஸ்டினேஷன் திருமணங்களில் ஆடம்பரமும் வீண்செலவுகளும் மிகவும் குறைவு என்பதால், இந்த முறை ரொம்பவே சிக்கனமாது.
ஹவாய் கரீபியன், மெக்ஸிகோ தீவுகளில் இருக்கும் கடற்கரை ரிசாட்களில் இவ்வகைத் திருமணங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.இத்தாலி, ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இவ்வகைத் திருமணங்களை நடத்திக் கொடுக்கும் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. பலவகை விலங்குகளும் பறவைகளும் சூழ்ந்த வன உயிரியல் பூங்காக்களை ஒட்டி இந்தத் திருமண நிகழ்விடங்கள் அமைந்திருக்கும். போரா போரா, மாலத்தீவு மற்றும் சீசெல்லெஸ் உள்ளிட்ட தீவுகள், இந்த வகைக் கொண்டாட்டங்களுக்குப் பெயர் பெற்றவை.
சில நிறுவனங்கள், கப்பல் பயணத்தின் போதே திருமணங்களை நடத்திக் கொடுக்கின்றன. இந்த இடங்களுக்குச் சென்று திருமணம் செய்து கொள்ளும் முன்னர், பயணத்துக்கான தூரம் நேரம் மற்றும் கட்டணம் உள்ளிட்டவற்றை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தங்குமிட வசதிகள், உள்ளூர்த் திருமணச் சட்ட திட்டங்கள் போன்றவற்றையும் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல், திருமணத்தை பேக்கேஜ் முறையில் நடத்திக்கொடுக்கும் நிறுவனத்தின் பின்னணி குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம். கடைசிநேரக் குளறுபடிகளைத் தவிர்க்க முன்கூட்டியே சிறப்பாகத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். திருமணத்துக்கு அழைக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செய்யப்பட்டிருக்கும் வசதிகளை முன்னதாகவே சொல்லிவிட வேண்டும்.
ஆடி போய் ஆவணி வந்தால், திருமண வையவங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். எனவே, உங்கள் மகனுக்கோ / மகளுக்கோ 'டெஸ்டினேஷன் திருமணம்' செய்துவைக்க விரும்பினால், இப்போதிருந்தே திட்டமிடத் தொடங்குங்கள்!
(கட்டுரை: ஆர்.லதா/ குமுதம் சிநேகிதி / 21.08.2025)
What's Your Reaction?






