ஆட்டிஸம் குழந்தைகளை மீட்டெடுக்கும் அன்னை: யார் இந்த வானதி?

ஆட்டிஸம் உள்ளிட்ட பாதிப்புகள் கொண்ட சிறப்புக் குழந்தைகளை, ‘வாழ்வியல் முறை’ வாயிலாக மாற்றி வருகிறார், வானதி பாலசுப்பிரமணியன். குமுதம் சிநேகிதி இதழுக்காக அவர் வழங்கிய நேர்க்காணல் இதோ..

May 5, 2025 - 18:06
ஆட்டிஸம் குழந்தைகளை மீட்டெடுக்கும் அன்னை: யார் இந்த வானதி?
a story of vanathi

37 வயதுக்காரரான இந்தப் பெண், சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சி முடித்தவர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தாடு கண்ணந்தங்குடியைச் சேர்ந்த இவர், ஆசிரியர் பயிற்சி  முடித்த கையோடு, திருச்சியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அதன்பிறகு, ‘ஆராரோ’ என்ற பெயரில் ‘டே கேர்’ ஒன்றை நடத்தினார். தற்போது தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் கடனா நதி அடிவாரத்தில் ‘வனப்பேச்சி வாழ்வியல் மையம்’ என்ற பெயரில் சிறப்புக் குழந்தைகள் மையத்தை நிறுவி, நடத்திவருகிறார். இதுக்குறித்து வானதியிடம் பேசினோம்.

‘‘ஆட்டிஸம், டவுன் சின்ட்ரோம் குழந்தைகளைப் பார்த்தாலே தெரியும். அதேநேரத்தில், அடையாளம் காணமுடியாத அளவுக்கு இயல்பானவர்களைப் போல இருக்கும் சில குழந்தைகளும்கூட, இதே மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கான பிரச்னை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப சில பயிற்சிகளை அளித்தாலே, அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். இதற்கு, அந்தக் குழந்தைகளின் பெற்றோரும் உடனிருக்க வேண்டும். அப்படியானால்தான், எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும் என்பதால், பெற்றோரையும் உடன் தங்க வைத்திருக்கிறேன்.

குழந்தைகளை விட பெற்றோர்கள் செய்யும் தவறு:

எங்களுடையது ’சிகிச்சை மையம்’ அல்ல; ’வாழ்வியல் மையம்’. அதாவது, எல்லா குழந்தைகளும் அவரவர் வீட்டில் எப்படித் தன்னிச்சையாக செயல்களைச் செய்கிறார்களோ... அதேபோல், இங்கு வரக்கூடிய குழந்தைகளையும் பழக்கப்படுத்துவது மட்டுமே என்னுடைய பிரதான வேலை. எங்களைத் தேடிவரும் பெற்றோராக இருந்தாலும் சரி... குழந்தைகளாக இருந்தாலும் சரி... முதலில் அவர்களை ஆற்றுப்படுத்துவதே முக்கியமான பணி. அதன்பிறகுதான் சில கற்பித்தல்.

இங்கே வரும் குழந்தைகளை விட, அவர்களுடைய பெற்றோர் செய்யக்கூடிய தவறுகளைச் சரிசெய்தாலே, குழந்தைகள் இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள். இன்னும் குறிப்பாக, அம்மாக்களில் பலரும், ‘நாங்கள் ஒழுங்காக தூங்கியே பல நாள்கள் ஆகின்றன’ என்கிறார்கள். ஒருசில அம்மாக்கள், ‘இங்கே வந்தபிறகுதான் என்னால் சரியாக மலம் கழிக்கமுடிகிறது’ என்று சொல்லி, கண்ணீர் விடுகிறார்கள். அந்தளவுக்கு அந்தத் தாய்மார் தங்களுடைய குழந்தைகளின் உடல்நிலை சரியில்லை என்பதால், உறக்கத்தைத் தொலைத்து, உண்பதை மறந்து, மலம் கழிப்பதைக்கூட ஒதுக்கிவைத்து வாழ்கிறார்கள். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் எங்களுடைய வாழ்வியல் மையத்தை சுதந்திரமான இல்லமாக்கியுள்ளேன்.

தாய்மார் சரியானாலே , அந்தக் குழந்தைகள் சரியாகிவிடுவார்கள். தன் கையால் எடுத்துச் சாப்பிடும் வயது வந்தபிறகும்கூட, சில குழந்தைகளுக்கு எப்படிச் சாப்பிட வேண்டுமென்று தெரிவதில்லை. இங்கே வந்தபிறகு, அவர்களாகவே சாப்பிடுகிறார்கள். 15 நாள்களுக்கு ஒருமுறை டாய்லெட் போன சிறுவன், இப்போது தினமும் டாய்லெட் போகிறான். உண்ட உணவு செரிமானமான பிறகு, கழிவுகள் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாவிட்டால், அவைப் பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும் என்பதை முதலில் பெற்றோர் உணரவேண்டும். அதுமட்டுமல்ல; எங்களுடைய வாழ்வியல் மையத்தில், நம் முன்னோர் பழக்கத்தில் இருந்துவந்த உணவுமுறையைத்தான் முழுக்க முழுக்க பின்பற்றுகிறோம்.

ஸ்நாக்ஸ்- பேச்சுக்கே இடமில்லை:

காலையில் கம்பங்கூழ் அல்லது கேழ்வரகு கூழ். தொட்டுக்கொள்ள கொள்ளுத்துவையல் / கறிவேப்பிலைத் துவையல் / வல்லாரைத் துவையல் செய்து கொடுப்போம். மதிய உணவில் பெரும்பாலும் செமிபாலிஷ்டு அரிசி... அதாவது, பாதியளவு பட்டைத் தீட்டப்பட்ட பாரம்பரிய அரிசிகளில்தான் சமைத்துக்கொடுப்போம். பூங்கார் அரிசி, ரத்தசாலி, தூயமல்லி உள்ளிட்ட அரிசிகளைத்தான் பயன்படுத்துகிறோம். நரிப்பயறில் கூட்டு அல்லது பச்சைப்பயறில் கூட்டு, காய்கறிப் பொரியல், அவியல் செய்வோம். நீர்க்காய்கள் மற்றும் கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகளைத்தான் சமைத்துக் கொடுப்போம். இரவில் அதிகபட்சமாக 7 மணிக்குள் சாப்பாட்டை முடித்துவிடுவோம். இரவு உணவானது, கம்பு அல்லது கேழ்வரகுடன் தோல் நீக்காத உளுந்து சேர்த்து அரைக்கப்பட்ட மாவில் இட்லி, தக்காளி சட்னி, சாம்பார் செய்துகொடுப்போம். இங்கே ‘ஸ்நாக்ஸ்’ என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

காலையில் கண்விழித்தது முதல், இரவு தூங்கும் வரை ஒரு வீட்டில் என்னென்ன நடக்குமோ, அதை முறைப்படுத்திச் செய்கிறோம். அவற்றை இந்தக் குழந்தைகள் பார்த்து புரிந்துகொண்டு செய்கிறார்கள். யாரையும் இதைச் செய், அதைச் செய் என்று வற்புறுத்த மாட்டோம். அவர்களாகவே கற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்துகிறார்கள். மண்ணுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பறவை போல் பறக்கிறான்:

அடர்ந்து கிளைப் பரப்பும் ஆலமரத்துக்கு, அதன் வேர்கள் இறுகப்பற்றிக் கொண்டிருக்கும் மண்ணின் மீதான ஆழமான நம்பிக்கை மட்டுமே. அதைத்தான் இங்கே நான் சொல்லிக்கொடுக்கிறேன். ஒரு காலத்தில் பவித்ரனுக்கு கோயில் பிடிக்காது, தியேட்டர் பிடிக்காது, வீட்டுக்கு யாராவது புதிதாக வந்தாலும் பிடிக்காது. மொத்தத்தில், கூட்டமே பிடிக்காது. ‘பிடிக்கல’ என்று சொல்லத் தெரியாமல் அழுவான். பீரோ சாவி தவறி விழுந்தால்கூட, பயத்தில் அவன் உடம்பு உதறும். நடப்பதற்குக்கூட நடுங்கியவன், இன்றைக்கு ஒரு பறவையைப்போல மாறி, வானத்தை அளக்கிறான். புதிய சூழல், புதிய மனிதர்களைக் கண்டால் பயந்து அழுது நடுங்கியவன், இப்போது அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து, மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.

எத்தனையோ மையங்களுக்குச் சென்று விரக்தியின் விளிம்பில் இங்கே வருபவர்களுக்கு, நம்பிக்கைக் கொடுக்கிறோம். பல குழந்தைகள் எங்களிடம் வந்து, நல்ல நிலைமைக்கு மாறியிருக்கிறார்கள். என்னிடம் வருவோரை, ‘தெரபி சென்டர் மனநிலையுடன் வராதீர்கள். இது, இயற்கைச்சூழலில் அமைந்திருக்கும் ஒரு வாழ்வியல் மையம்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி புரியவைக்கிறேன். எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்; கூடவே, ஆழமான நம்பிக்கையும் வையுங்கள். இந்தச் செல்லக்குழந்தைகளைச் சிறகடித்து பறக்கவைப்பது என் பொறுப்பு!’’ என்று சொல்லிமுடித்த வானதியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பொங்கி நின்றது.

(கட்டுரை: எம். மரிய பெல்சின், குமுதம் சிநேகிதி, 15.05.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow