நம்மள பத்தி பேச வைக்க ரொம்ப மெனக்கெடனும்.. சொல்கிறார் சீரியல் ஹீரோ புவியரசு
சாண்டி மாஸ்டருக்கு என்னைய ரொம்பப் புடிக்கும். என்னோட இன்ஸ்பிரேஷன் அவர்தான். ‘மானாட மயிலாட’ ஷோவுல ஃபைனலுக்கு அவர்தான் எனக்கு கொரியோகிராபி பண்ணாரு என்று மகிழ்கிறார் புவியரசு.
நாம பண்ணுற ஒவ்வொரு விஷயத்துக்கும் மெனக்கெடணும். நமக்குப் போட்டியா யார் வந்தாலும், நாம போடுற உழைப்பும், மெனக்கெடலும்தான் நம்மளப் பத்தி பேசவைக்கும். நாம போடுற 100% உழைப்பு நமக்கு முதல்ல திருப்தியா இருக்கணும் என்கிறார் டிவி சீரியல் நடிகர் புவியரசு.
‘அழகிய தமிழ்மகள்’, ‘ஒரு ஊர்ல ராஜகுமாரி’, ‘இதயம்’ என்று ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சீரியல்களில் கதாநாயகனா கலக்கியவர் புவியரசு. இளம்பெண்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ செட்டில் புவியை சந்தித்தோம்.
உங்களோட சீரியல் அனுபவம் பற்றி
‘‘நான் மெயின் ரோல் பண்ணணும்னு வரலங்க. ஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோவுக்காக வீட்டைவிட்டு வந்துட்டேன். அடுத்து என்ன பண்ணனும்னு தெரில. நிறைய டான்ஸ் ரியாலிட்டி ஷோவுக்கு வாய்ப்புக் கேட்டிருந்தேன். அப்போ ஒரு சீரியல்ல நடிச்சிட்டிருந்த ஹீரோ, பாதிலயே விலகிட்டாரு. அவருக்கு பதிலா எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. அதுலேருந்து தொடர்ந்து நிறைய கேரக்டர்கள் நடிச்சேன். ஒருநாள் ஜீ தமிழ்ல சீரியலுக்கு ஆடிஷன் போயிருந்தேன். அங்க செலக்ட்டாகித்தான் ‘அழகிய தமிழ்மகள்’ சீரியல்ல மெயின் ஹீரோவா செலக்ட் ஆனேன்.’’
‘மானாட மயிலாட’ டான்ஸ் ஷோ- அனுபவம் எப்படி இருந்தது?
‘‘எங்க டான்ஸ் மாஸ்டர் அப்துல்னு ஒருத்தர் செம ஸ்டைலா ஆடுறதப் பார்த்து, அவரைப் போலவே ஸ்டைல் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். ஒருநாள் அவரே என்கிட்ட வந்து, ‘உன்னோட டான்ஸ் ஸ்டைல் நல்லாருக்கு, நீ ரியாலிட்டி ஷோ பண்ணு’னு சொல்லி, என்னைய ‘மானாட மயிலாட’ ஷோவுக்கு அனுப்புனாரு. அந்த ஷோவுல மணி, சாண்டினு ரெண்டு மாஸ்டர்களும் பயங்கர ஃபேமஸ். சாண்டி மாஸ்டருக்கு என்னைய ரொம்பப் புடிக்கும். என்னோட இன்ஸ்பிரேஷன் அவர்தான். ‘மானாட மயிலாட’ ஷோவுல ஃபைனலுக்கு அவர்தான் எனக்கு கொரியோகிராபி பண்ணாரு.’’
‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ல நீங்க நடிச்சப்போ வரவேற்பு கிடைச்சுதா?
‘‘அந்த சீரியல் நான் நடிக்கப்போகும்போது, ஏற்கெனவே ஒருத்தர் ‘இனியன்’ கேரக்டர் பண்ணிட்டிருந்தாரு. அவருக்குப் பதிலாத்தான் நான் நடிக்கப் போனேன். அப்படியிருக்கும்போது அவர மனசுல வைச்சுட்டுப் பார்க்கிறவங்க, என்னைய எப்படி ஏத்துப்பாங்கன்னு சவாலா இருந்துச்சு. ஆனா, நடிக்க ஆரம்பிச்சதுலேருந்து இப்போவரைக்கும் அந்த இனியன் கேரக்டராதான் எல்லாரும் என்னைப் பார்க்குறாங்க. ‘பக்கத்து வீட்டு பையனா’ என்னை ஏத்துக்கிட்டாங்கன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம்தான். ஆனா, அதை மெயின்டெயின் பண்றதுக்கு நான் எதுவுமே பண்ணலங்க. நான், நானாவே இருக்கேன்... அவ்வளவுதான்!’’
ஒரு ஹீரோவுக்கு இருக்கவேண்டிய முக்கியமான தகுதி என்ன?
‘‘வேறென்ன... மெனக்கெடல்தான்! நாம பண்ணுற ஒவ்வொரு விஷயத்துக்கும் மெனக்கெடணும். நமக்குப் போட்டியா யார் வந்தாலும், நாம போடுற உழைப்பும், மெனக்கெடலும்தான் நம்மளப் பத்தி பேசவைக்கும். நாம போடுற 100% உழைப்பு நமக்கு முதல்ல திருப்தியா இருக்கணும்.’’
புவியை ஹீரோவா படங்கள்ல பார்க்கலாமா?
‘‘நிச்சயமா பார்க்கலாம். அந்த கான்ஃபிடென்ட்தான் என்னைய ஓடவைக்குது. நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாது. இதுவரைக்கும் பட வாய்ப்பு எனக்கு வரல. வெயிட் பண்ணிட்டிருக்கேன். அதுக்கான நேரம் வரும்போது நிச்சயமா வாய்ப்புக் கிடைக்கும்னு நம்பறேன்.’’
- விஜயலட்சுமி
What's Your Reaction?