புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பன் காளை உயிரிழப்பு.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்
எருதுவிடும் நிகழ்வுகளில் பங்கேற்று பெரும் புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பன் காளை உயிரிழந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் வளர்த்து வந்த காளை அப்பகுதியில் எருதுவிடும் நிகழ்வில் பங்கேற்று பெரும் புகழ்பெற்றது. மற்ற காளைகளிடமிருந்து தனித்துத் தெரியும் வகையில், ஒற்றைக் கொம்பு மட்டுமே கொண்ட இவரது காளை.. அப்பகுதியில், வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன் என அன்போடு பலரால் அழைக்கப்பட்டு வந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் குப்பம் போன்ற பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற எருதுவிடும் விழாக்களில் பங்கேற்று முதல்பரிசை பெற்று அசத்தியுளது. ஒற்றைக் கொம்பன் விழாவில் பங்கேற்கிறான் என்றாலே அதற்கென தனி ரசிகர் பட்டாளம் கூடிவிடும்.
எருதுவிடும் நிகழ்வில் நடந்த விபத்து:
பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நிலையில், கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் பங்கேற்ற ஒத்தகொம்பன் என்ற காளை எதிர்பாராவிதமாக கீழே வீழ்ந்ததில் காளையின் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காளையானது பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
வடமாவட்டங்களில் எருதுவிடும் விழா என்றாலே முதலில் அனைவரும் எதிர்பார்ப்பது இந்த வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் நம்பர் 10 என்னும் ஒத்த கொம்பன் காளையை தான். அந்த வகையில் புகழ்பெற்ற காளை தற்போது உயிரிழந்த சம்பவம் காளை ரசிகர்கள் மத்தியிலும், சுற்றுவட்டார கிராமப்பகுதிகளிலும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
Read more: தட்டைப் பாதம்..எரிச்சல்.. கால் ஆணி: இதற்கெல்லாம் என்ன தான் செய்வது?
What's Your Reaction?






