விஜய்யின் முதல் அரசியல் பேச்சு - வரிந்துக்கட்டி வந்த தலைவர்கள் 

“ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு " மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன் என பா.ரஞ்சித் பதிவு

Oct 27, 2024 - 22:13
விஜய்யின் முதல் அரசியல் பேச்சு - வரிந்துக்கட்டி வந்த தலைவர்கள் 
விஜய்யின் முதல் அரசியல் பேச்சு - வரிந்துக்கட்டி வந்த தலைவர்கள் 

தவெக மாநில மாநாட்டில் விஜய் அரசியல் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவித்துள்ள நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய், அரசியல் கொள்கை மற்றும் கட்சியின் கொள்கைத் தலைவர்கள் குறித்து விளக்கினார். இதில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சமகால அரசியல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். குறிப்பாக ஆளும் திமுக அரசை சாடி பேசினார் விஜய். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் போட்டி மற்றும் கூட்டணி குறித்தும் விஜய் பேசினார்.

இந்த நிலையில், விஜய்யின் அரசியல் பயணத்திற்கும், அவரது கருத்தும் விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பதில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய். அவருக்கு வாழ்த்துகள். 

‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என்று தெரிவித்துள்ளார்.இதேப்போல் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழகவெற்றிக்கழகம் தலைவர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow