தட்டைப் பாதம்..எரிச்சல்.. கால் ஆணி: இதற்கெல்லாம் என்ன தான் செய்வது?

கால்விரல்கள் மற்றும் கால்விரல்களுக்கு நடுவிலுள்ள பகுதிகளை தினமும் சுத்தம் செய்தும் ஈரமில்லாமல் நன்றாகத் துடையுங்கள். சிலருக்கு வறண்ட சருமப் பிரச்னை இருக்கும். அவர்கள், தங்கள் பாதங்களையும் குதிகால்களையும் ஈரப்பதமாக வைத்திருப்பது நல்லது.

Mar 25, 2025 - 17:30
தட்டைப் பாதம்..எரிச்சல்.. கால் ஆணி: இதற்கெல்லாம் என்ன தான் செய்வது?
பாதங்களை பராமரிப்பதன் அவசியம்

நம்முடைய மொத்த உடல் எடையையும் தாங்கி, நடப்பதற்கு உதவும் முக்கிய உறுப்பு, பாதம். 26 எலும்புகளாலும், 33 இணைப்புகளாலும், 100-க்கும் மேற்பட்ட தசைகளாலும், தசை நாண்களாலும், தசை நார்களாலும் ஆனது மனிதர்களின் பாதம்.

இத்தகைய சிறப்பு தன்மை வாய்ந்த பாதத்தினை நாம் பராமரிக்க தனிக்கவனம் செலுத்துகிறோமா? என்றால் இல்லை என்பது தான் உண்மையான பதில். பாதங்களை பராமரிக்க என் கவனம் செலுத்த வேண்டும்? அதனால் என்ன வித நன்மைகள் உள்ளது? என்பது குறித்து மருத்துவர் ரவிக்குமார் நம்முடன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு-

வெளியிடங்களுக்கு ஒருபோதும் வெறுங்காலுடன் செல்லாதீர்கள். கால்களைப் பாதுகாக்க பொருத்தமான காலணிகளைத் தேர்வு செய்து அணியுங்கள். கால்விரல் நகங்களை வாரம் ஒருமுறை வெட்டுங்கள். சூடான பகுதிகளுக்கு மிக அருகில் உங்கள் கால்களை வைக்காமல், மிகுந்த கவனமாக இருங்கள். புகைப்பிடிப்பதால் ரத்தநாளங்கள் சுருங்குகின்றன. பாதத்திற்கான இரத்த ஓட்டம் குறைகிறது.தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். விறுவிறுப்பான நடைப்பயிற்சி, உங்கள் உடலில் ரத்தஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். 

பாத எரிச்சல்:

பாதங்களில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்படுவதால்தான், "பாத எரிச்சல்' உண்டாகும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானாலும், நரம்புகள் பாதிக்கப்பட்டு 'பாத எரிச்சல்' ஏற்படக்கூடும்.

பாத எரிச்சல்' என்றவுடன். 'நமக்கு சர்க்கரை நோய் இருக்குமோ? என அஞ்சவேண்டாம். புற்றுநோய்க்காக கீமோதெரபி எடுக்கும்போதும் முடக்குவாதம் தொற்று, சிறுநீரகச் செயலிழப்பு, ரசாயனங்களால் ஏற்படும் அலர்ஜி உள்ளிட்ட பல காரணங்களாலும் நரம்புகள் சேதமடையலாம். இதன் தொடர்ச்சியாகத்தான் பாத எரிச்சல் வரக்கூடும். வைட்டமின் ’பி3' நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், பாதங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம். ஆகவே முழுதானியங்கள், பச்சைக் காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை, பால், தயிர், முட்டையின் மஞ்சள்கரு உள்ளிட்டவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

தட்டைப் பாதம்:

சிலருடைய பாதங்கள் வளைவாக இல்லாமல் தட்டையாக இருக்கலாம். இது, தட்டைப் பாதம் என அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு நடக்கும்போது கால்வலி வரும். இவர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட 'ஆர்ச் சப்போர்ட்’ (Arch Support) காலணிகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி அணிந்தால், வலி தீரும். தட்டைப் பாத குறைபாடு உள்ள குழந்தைகளை மணலில் விளையாட விடுவதன் மூலம் அந்தக் குறைபாட்டை சரிசெய்யலாம்.

கால் ஆணி:

கால் ஆணி என்பது அதிகப்படியான அழுத்தத்தால் வளரக்கூடிய, இறந்த செல்களின் தொகுப்பு. பாதத்தில் ஆணிப் பிரச்சனை வந்தால், முதலில் ஒருவித அழுத்தம் தருவது போலிருக்கும். கவனிக்காமல் விட்டால், பாதத்தைத் தரையில் ஊன்ற முடியாத அளவிற்கு வலியைத் தரக்கூடும். 'கால் ஆணியின் முதல் அறிகுறியாகப் பாதத்தின் தோல் பகுதி கடினமானதாக மாறும். கால் ஆணி பிரச்சனையால் பாதிப்புக்கு உள்ளான பகுதியை 'சுயமருத்துவம்' என்ற பெயரில் கீறி ஆணியை எடுக்க முயன்றால். தொற்று பாதிப்பு வரலாம். பாதங்களின் இதரப் பகுதிகளிலும் பரவி, பாதிப்பு தீவிரமடையலாம்.

பொறுத்துக்கொள்ள முடியாத வலி நடப்பதில் சிரமம் எனப் பாதிப்பு தீவிரமடையும் முன்பே மருத்துவரை அணுகுவது நல்லது. சிலருக்கு 'குதிகால் வலி’ அதிகமாக இருக்கும். குதிகாலில் 'குருத்தெலும்பு' முளைத்திருந்தால் கூட இப்படி வலியெடுக்கும். அவர்கள், மருத்துவர்களை அணுகி, சிகிச்சைப் பெறவேண்டியது அவசியம். எனவே, பாதங்களைப் பராமரிக்கும் விஷயத்தில் எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காதீர்கள்.

நீரிழிவு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்:

பாதங்களில் சிறியவெட்டுகள், கொப்புளங்கள் அல்லது தீக்காயங்களைப் புறக்கணிக்காதீர்கள். சர்க்கரை நோயால், பாதத்தில் ஏற்படும் பாதிப்புகள், சிலருடைய காலை இழக்கும் அளவுக்கு அபாயத்தில் கொண்டு போய்விடுகிறது. எனவே, நீரிழிவு விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். பாதங்களின் பின்பகுதியை நம்மால் எளிதாகப் பார்க்க முடியாது. எனவே, முகம் பார்க்கும் கண்ணாடியைப் பயன்படுத்தி புண்கள், கொப்புளங்கள், தோலில் சிவந்த நிறம் ஏதுமுள்ளதா? என்று அடிக்கடி பரிசோதியுங்கள்.

படுக்கைக்குச் செல்லும் முன்போ அல்லது காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததுமோ உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் சிறிதுநேரம் கழுவுங்கள். இதனால் பாதத்தில் ரத்தஓட்டம் அதிகரிக்கும். ஷூ (Shoe) அணியும்போது காட்டன் காலுறைகளை (Cotton Socks) உபயோகியுங்கள். காலணிகளை அணியும் முன்பாக உள்ளே ஏதும் கூரானப் பொருள்கள் அல்லது தேள், பூரான் மாதிரியான ஐந்துக்கள் இருக்கின்றனவா? என்று பரிசோதித்த பிறகு அணியுங்கள்.

நல்ல காற்றோட்டமுள்ள செருப்புகளையும், ஷூக்களையும் அணியுங்கள். இது உங்களின் கால்களில் புண்களை ஏற்படுத்தாமல், தவிர்க்க ஒரு சிறந்த வழிமுறையாகும். பாதத்தில் ஏதாவது புண்கள் தோன்றினால், உடனே மருத்துவரிடம் காண்பித்து கலந்தாலோசிக்கவும். இதனால், எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow