விவசாயிகளுக்காக களத்தில் இறங்கியுள்ளேன்! என் வரவு எனக்கே வியப்பு.. - இயக்குநர் தங்கர் பச்சான்
என்.எல்.சியால் ஏமாற்றப்படும் விவசாயிகளுக்காகவே அரசியலில் இறங்கியுள்ளதாக பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
                                என்.எல்.சியால் ஏமாற்றப்படும் விவசாயிகளுக்காகவே அரசியலில் இறங்கியுள்ளதாக கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்து களம் காண்கிறது. அதில், கடலூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், முதன்முறையாக இயக்குநர் தங்கர் பச்சானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமது வேட்பு மனுவைத் தங்கர் பச்சான் நேற்று (மார்ச் 25) தாக்கல் செய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தமது அரசியல் வருகை தமக்கே வியப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். மக்கள் தமக்கு அளித்து வரும் வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்த தங்கர் பச்சான், சமூக சேவைக்காகத் திரைப்படங்களை இயக்கியதைப் போலவே, அரசியல் மூலம் மக்கள் சேவையைக் கருதி அரசியலுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். கடலூர் தொகுதி இதுவரை 20 நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களைச் சந்தித்துள்ளது என்று கூறிய அவர், ஆனால் தொகுதியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
குறிப்பாக 50 ஆண்டுகளாக கடலூருக்கு எந்த வளர்ச்சியும் இல்லை என்று கூறினார். மேலும், என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தால் 44,000 ஏக்கர் விளைநிலங்களைப் பறிகொடுத்தது மட்டுமின்றி, இன்னும் 24,000 ஏக்கர் விளைநிலங்களைப் பறிகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளுக்காக தாம் தேர்தலில் இறங்கியுள்ளதாகவும் கூறினார்.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            