ரத்தாகிறதா வெற்றிப் பயணம் திட்டம்? எகிறும் நிதிச்சுமை...குழம்பும் தவெக அரசு!
வெற்றிப் பயணம் திட்டத்தால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், டீசல் செலவு உள்ளிட்ட நிதி நெருக்கடி காரணமாக இத்திட்டம் தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் கடந்த அக்டோபர் 2-ம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த விடியல் பயணத் திட்டத்துடன் கூடுதலாக, குறிப்பிட்ட விரைவு மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் வெற்றிப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. வெற்றிப் பயணத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கான நிதி ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா என்ற சந்தேகத்தையும் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனம் எழுப்பியுள்ளது.
டீசல் கொள்முதல் தொகை செலுத்துவதில் சிக்கலா?
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 15-ம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூன்று நாள் கடனில் டீசல் கொள்முதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த டீசலுக்கான தொகையை அக்டோபர் 18-ம் தேதிக்குள் செலுத்த வேண்டியிருந்ததாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை நிறுத்தும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், டீசல் விநியோகம் உண்மையில் நிறுத்தப்பட்டுள்ளதா அல்லது பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து தனியாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை.
டெப்போக்களை அடமானம் வைக்க முயற்சியா?
போக்குவரத்துக் கழகங்களின் நிதி நெருக்கடி காரணமாக, 23 மண்டலத் தலைமை அலுவலகங்கள் அல்லது அதிக மதிப்புள்ள டெப்போக்களை வங்கிகளில் அடமானம் வைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.
ஏற்கெனவே போக்குவரத்துக் கழகங்கள் கடன் சுமை, டீசல் செலவு, பேருந்துப் பராமரிப்புச் செலவு உள்ளிட்ட பல்வேறு நிதிச் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன.
வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கப்பட்டபோது, அதற்கான நிதியைப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குவது குறித்து நிதித்துறையும் போக்குவரத்துத் துறையும் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டனவா என்ற கேள்வியையும் சம்மேளனம் எழுப்பியுள்ளது.
ஆயுத பூஜைக்காகச் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதில் சிக்கலா?
ஆயுத பூஜை விடுமுறைக்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பும் நிலையில், பேருந்து சேவைகள் பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளதாகச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
டீசல் கொள்முதல் தொகையை உரிய காலத்தில் செலுத்தத் தவறினால், அக்டோபர் 18-ம் தேதி முதல் மாத இறுதி வரை பேருந்துகளை இயக்குவதும் வெற்றிப் பயணத் திட்டத்தைத் தடையின்றித் தொடர்வதும் கடினமாக இருக்கலாம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இலவசப் பயணத்துக்கான தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு முறையாக வழங்கினால், பெண்களுக்கான வெற்றிப் பயணத் திட்டத்தைத் தடையின்றித் தொடர முடியும் என்றும் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
ரத்தாகுமா வெற்றிப் பயணம் திட்டம்?
பெண்களின் இலவசப் பயணத்தை விரிவுபடுத்தியுள்ள தமிழ்நாடு அரசுக்கு, தற்போது போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை தொடர்பான கேள்விகள் புதிய சவாலாக மாறியுள்ளன. ஒருபுறம் பெண்களுக்கான இலவசப் பயணத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டிய பொறுப்பு; மறுபுறம் டீசல் கொள்முதல் மற்றும் பேருந்து இயக்கத்துக்கான செலவுகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் எனப் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இருப்பினும், வெற்றிப் பயணத் திட்டத்தை அரசு ரத்து செய்யப்போகிறதா அல்லது தொடர்ந்து செயல்படுத்துவதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமா என்பது குறித்து இதுவரை உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.
போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் சம்மேளனத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது.
மேலும் இந்த வெற்றிப் பயணம் ரத்தாகுமா? இல்லை இது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.
What's Your Reaction?

