11 வேடங்களில் அசத்திய ஹீரோ நம்பியார்...76 ஆண்டுகளாகியும் ‘திகம்பர சாமியார்’ நினைவுகள்!
1950-ல் வெளியான ‘திகம்பர சாமியார்’ படத்தில் எம்.என்.நம்பியார் 11 வேடங்களில் நடித்து அசத்திய நிலையில், த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த இப்படம், தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா! - வி.ராம்ஜி
எழுபது வருடங்களுக்கு முன்பு, படமெடுத்தால் அது புராணப் படமாக இருக்கும். ராஜா ராணி என சரித்திரப்படங்களாக இருக்கும். சமூகப் படங்களாக எடுத்தது குறைவுதான். அப்படியே எடுத்தாலும் காதல் கதை கொண்ட படங்களாகத்தான் எடுத்தார்கள். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம் வரை, தேச பக்தியை மையமாகக் கொண்ட படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால், அந்தக் காலத்திலேயே, சமூகக் கதையாக, துப்பறியும் கதையாக, த்ரில்லர் கதையாக எடுத்தார்கள்.
அதுதான் ‘திகம்பர சாமியார்’. வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவர் எழுதிய துப்பறியும் நாவல், சினிமாவாக, தெளிவான திரைக்கதையாக மாற்றப்பட்டது. அதுதான் ‘திகம்பர சாமியார்’.
நாடகங்களில் நடித்து வந்த எம்.என்.நம்பியார், 1935ம் ஆண்டு ‘பக்த ராமதாஸ்’ படத்தின் மூலமாக திரையுலகிற்குள் வந்தார். பின்னர் மீண்டும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றினார். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு ‘திகம்பர சாமியார்’ படத்தில் நடித்தார். முன்னதாக, குணச்சித்திர ரோல், காமெடி ரோல் என்றெல்லாம் பண்ணியவர் வில்லனாகவும் நடித்தார்.
‘திகம்பர சாமியார்’ படத்தில் நம்பியார்தான் ஹீரோ. எத்தனையோ படங்களில், நம்பியார் செய்யும் தவறுகளை போலீஸ் கண்டுபிடிக்கும். இந்தப் படத்தில், நம்பியார்தான் அட்டூழியங்களையும் அதைச் செய்தவர்களையும் கண்டுபிடிப்பார். ‘திகம்பர சாமியார்’ படத்தையும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது.
புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாடர்ன் தியேட்டர்ஸ் படமென்றாலே, அது வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று அந்தக் கால ரசிகர்கள் உறுதியாக நம்பினார்கள். குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம், பெண்கள் பார்த்தால்தான் படம் ஓடும் என்கிற டார்கெட்டுகளுக்குள் அடங்காமல் படமெடுக்கும் நிறுவனம் இது. ஆச்சரியங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் த்ரில்லிங்கும் சஸ்பென்ஸும் கொண்ட கதைகளுமாக முக்கியத்துவம் கொடுத்து எடுப்பதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டைல்.
விஞ்ஞானம், உளவியல், க்ரைம், சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று பல விஷயங்களை அப்போதெல்லாம் எடுக்கமாட்டார்கள். ஆனால் இவை அனைத்தையும் கொண்டு அந்தக் காலத்திலேயே படமாக எடுத்தார்கள். டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். மருதகாசி, கா.மு.ஷெரீப், கே.பி.காமாட்சி, தஞ்சை ராமையா தாஸ், கண்ணதாசன் முதலானோர் பாடல்களை எழுதினார்கள். படத்தில் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளின் ஆட்டமும் பாடலும் வெகு பிரபலம்.
எம்.ஜி.சக்ரபாணி, வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி முதலானோர் நடித்திருந்தார்கள். பாடல்களும் காட்சி அமைப்புகளும் பேசப்பட்டன. ஜி.ராமநாதனும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் சேர்ந்து இசையமைத்தார்கள். பாடல்கள் பலவும் இந்திப் பாடல்களின் ஸ்டைலில் மெட்டமைக்கப்பட்டன. மேலும் இந்திப் பாடல்களைப் போலவே வாத்தியக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. ஆங்கிலப்பட பாணியில் படம் எடுப்பதும் இந்திப் பாடல்களின் ஸ்டைல்களைப் புகுத்துவதிலும் இந்த நிறுவனம் மிகுந்த ஆர்வம் காட்டியது என்றுதான் சொல்லவேண்டும்.
இன்றைக்கும் இந்தப் படம் பேசுபொருளாக இருப்பதற்கு, படத்தின் கதை, நுட்பமான திரைக்கதை, கதையில் இருக்கும் அறிவியல், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகள் என பலதும் காரணமாக இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து அதிகம் பேசப்பட்டவர் எம்.என்.நம்பியார். இவரின் ஹீரோயிஸ நடிப்பும் இவரும் கொள்ளை அழகு. செவிட்டு மந்திரவாதி, வெற்றிலை வியாபாரி, நாகஸ்வர வித்வான், இஸ்லாமியர், போஸ்ட்மேன் முதலான 11 வேடங்களில் நடித்து ரசிகர்களை வியக்கவைத்தார். ‘ஒருவர் நான்குநாட்களாக தூங்காமல் இருந்தால், ஐந்தாம்நாள் அவரிடமிருந்து ரகசியங்களை வாங்கிவிடலாம்’ என்பதை அழகாகக் காட்டியிருப்பார்கள்.
ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு விதமான மாடுலேஷன்கள், பாடி லாங்வேஜுகள், டயலாக் டெலிவரி என்று வெரைட்டி காட்டியிருப்பார் நம்பியார். ஒவ்வொரு காட்சியும் குற்றங்களைக் கண்டுபிடிக்கிற நேர்த்தியும் விறுவிறுப்பு குறையாமல் இருக்கும். பிரபுதேவா இயக்கத்தில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த ‘போக்கிரி’ ஞாபகம் இருக்குதானே! விஜய் நடித்த ‘போக்கிரி’தான். இதில் பிரகாஷ்ராஜை கைது செய்யும் விஜய், பிரகாஷ்ராஜை விடியவிடிய தூங்கவிடாமல் டார்ச்சர் பண்ணுவார்.
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை சண்முகா தியேட்டரில் வேலை பார்க்கும்போது, புத்தம்புதிய காப்பி என்று ‘திகம்பர சாமியார்’ வெளிவந்தது. ’என்னய்யா இது... எம்ஜிஆருமில்லை, சிவாஜியுமில்லை’ என்று பலரும் இந்தப் படத்துக்கு முதலில் வரவே இல்லை.’பக்திப்படத்துக்கு நான் வரலை. அறுத்துக்கொன்னுருவாய்ங்க’ என்று படத்தின் டைட்டிலை வைத்து கதை, திரைக்கதையே எழுதிவிட்டு, தியேட்டர் பக்கம் வராமலேயே இருந்தார்கள்.
ஆனால் இரண்டாவது நாள் இரவுக்காட்சிக்கு கூட்டம் ஓரளவு வந்தது. மூன்றாம் நாள் ஈவினிங் ஷோவுக்கும் நைட்ஷோவுக்கும் முக்கால்வாசி நிரம்பியது. கிட்டத்தட்ட ஏழெட்டு நாட்கள் ஓடி, நல்ல கலெக்ஷனைக் கொடுத்தது. தியேட்டர் முதலாளிகளில் ஒருவரான ராமகிருஷ்ணன் அண்ணன் என் மீது பிரியமாக இருப்பார். மூணுநாள், நாலுநாள் என எந்தப் படம் போடலாம் என என்னைக் கேட்பார். அப்படி அவர் கேட்டபோது இந்தப் படத்தைச் சொன்னேன். ‘செம கலெக்ஷன் ராம்ஜி. படமும் சூப்பரா இருக்கு. எங்க அப்பா காலத்திலிருந்து தியேட்டர் வைச்சிருக்கோம். இப்படியொரு படம் பத்தி அப்பா சொன்னதே இல்லை’ என்று பாராட்டிவிட்டு, எனக்கு பரோட்டா வாங்கிக்கொடுத்தார்.
’ஒரு மனிதனை நான்குநாட்கள் தூங்கவிடாமல் வைத்திருந்தால், ஐந்தாம்நாள் அவன் மனதில் இருக்கும் ரகசியங்களையெல்லாம் அவனுடைய வாயாலேயே கேட்டு அறிந்துகொள்ளலாம்’ எனும் உளவியல் சார்ந்த விஷயத்தை வைத்துக்கொண்டு, அந்தக் காலத்திலேயே படம் பண்ணியிருக்கிறார்கள். அந்தப் படம்... ‘திகம்பர சாமியார்’. ஏதோ... இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த படம் என்று நினைத்துவிடாதீர்கள். ‘திகம்பர சாமியார்’ படம் வெளியாகி 70 வருடங்களாகின்றன.
1950ம் ஆண்டு நம்பியார் நாயகனாக நடித்த ‘திகம்பர சாமியார்’ வெளியானது. 1956ம் ஆண்டுதான் என் பெற்றோருக்குத் திருமணமானது. 1968ஆம் ஆண்டுதான் நான் பிறந்தேன். படம் வெளியாகி, 76 ஆண்டுகளாகிவிட்டன. எந்த சாமி புண்ணியமோ... சாமியாரின் புண்ணியமோ... நான் படம் பார்த்த பட்டியலில் இந்தப் படமும் இடம்பெற்றுவிட்டது. இதையெல்லாம் சினிமாவின் சரித்திரமா சொல்லும்? நாமளே இதையெல்லாம் சொல்லிப் பூரித்துக்கொள்ளவேண்டியதுதான்!
மாடர்ன் தியேட்டர்ஸ் என்று ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல் படங்களை பின்னாளில் எடுத்த நிறுவனத்தையும் மக்கள் மறக்கவில்லை; வில்லன் நடிப்பில் மிரட்டியெடுத்துவிட்டு, ஐயப்ப சுவாமியையே நமக்கும் தமிழகத்துக்கும் பரிச்சயப்படுத்திய நம்பியார் குருசாமியையும் மக்கள் மறக்கவே மாட்டார்கள்!
What's Your Reaction?

