கொலை செய்யும் வடிவேல்.. கூட சுத்தும் பஹத்: மாரீசன் திரைப்பட விமர்சனம்

மாமன்னன் படத்தில் எதிரும் புதிருமாக கவனத்தை ஈர்த்த வடிவேல்- பஹத் பாசில் கூட்டணியில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா?

கொலை செய்யும் வடிவேல்.. கூட சுத்தும் பஹத்: மாரீசன் திரைப்பட விமர்சனம்
Maareesan movie kumudam review

வடிவேலு- பஹத் பாசில் காம்போவில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகிய நிலையில், இப்படத்திற்கான குமுதம் விமர்சனம் இதோ..

ஐந்து கொலைகளை அசால்டாக செய்யும் வடிவேலு, அதை ஏன் செய்கிறார், எப்படி செய்கிறார்? என்பதுதான் ‘மாரீசன்’ கதை. படத்தில் அவர் பெயர் மாரீசன் இல்லை. ஏன் செய்தார் என்பதற்குச் சொல்லப்படும் காரணம், மனைவி சித்தாராவுக்கு அவர் செய்து கொடுத்த சத்தியம். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், மனைவியைக் குணப்படுத்த முயற்சி செய்யாமல், அவர் இறந்ததும் சத்தியத்தைக் காப்பாற்ற, ஐந்து கொலைகளைச் செய்ய பெட்டி படுக்கையுடன் வடிவேலு கிளம்பிவிட்டார் என்பது இயக்குநர் சுதீஷ் சங்கருக்கு லாஜிக்கலாக தெரியலாம், பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் லூசுத்தனமாகத்தான் தெரியும்.

சரி; அந்தக் கொலைகளை அவர் எப்படி செய்கிறார் என்பதாவது லாஜிக்கலாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறதா? 

முதல் கொலையில் ஒரு திருடன் தயவில் அவர் தப்பிக்கிறார் என்பதே தத்தக்கா புத்தக்கா என்றால், அந்தத் திருடனுடன் டிராவல் செய்துகொண்டே கொசு மருந்து அடிப்பது போல் அடுத்த இரண்டு கொலைகளைச் செய்துவிட்டார் என்று பாடிகளை மட்டும் காட்டுவது, பகீர்!

கடைசி இரண்டு கொலைகளை மட்டும் காமெடி போலீஸ் கோவை சரளா துரத்த, கூட வரும் பகத் ஃபாசிலுக்குத் தெரியாமல் வடிவேலு எப்படி செய்கிறார் என்று காட்சிப்படுத்தி இருப்பது கொஞ்சம் த்ரில்லிங். ஞாபக மறதிக்காரராக வடிவேலு நடிப்பு பிரமாதம்.  பகத் ஃபாசில் இயல்பு. இசை, ஒளிப்பதிவு, சிறப்பு.

திருடன் பகத் ஃபாசிலுடன் பைக்கில் வடிவேலு டிராவல் பண்ணும்போது இயல்பாக நடக்கும் சில சம்பவங்களைத் தவிர்த்து ரசிப்பதற்கோ, வியப்பதற்கோ படத்தில் சராசரி ரசிகனுக்கு ஒன்றுமே இல்லை. ‘மாரீசன்’ & கண்கட்டு வித்தை!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow