கமிஷன்... கரப்ஷன் .. கட்டிங்.. விஜய் சர்காரில் உருவெடுத்த புதிய வில்லன்கள்..!
லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளால் அரசு ஊழியர்களிடம் அதிருப்தி அதிகரித்துள்ளது. அரசு விழாக்கள் மற்றும் வி.வி.ஐ.பி. செலவுகளுக்கு அரசு நிதி ஒதுக்கி, நடைமுறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
"யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது, இது எங்கள் விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள்' என்று முதலமைச்சர் விஜய் செய்த கர்ஜனை, தமிழ்நாடு வரலாற்றில் நிகழாதது. அதனாலேயே அந்த கர்ஜனை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படியாக விஜய் எடுக்கும் முயற்சிக்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு பெருகிவரும் அதே நேரத்தில், இந்த விவகாரம் அரசு இயந்திரத்தில் பெரும் அதிர்வலைகளையும் சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது. காலம் காலமாக லஞ்ச, லாவண்யத்தில் ஊறிய அரசு ஊழியர்களில் ஒரு தரப்பு, தாங்கள் வாங்கும் லஞ்சத்திற்கு சப்பைக்கட்டு கட்டி, விஜய் சர்க்காருக்கு புதிய வில்லன்களாக மாறியிருப்பதுதான் கோட்டை வட்டார ஹாட் நியூஸ்!
சமீபத்தில், நாமக்கல்லில் வருவாய்த்துறையினர் நடத்திய போராட்டத்தில் சங்க நிர்வாகி ஒருவர் எழுப்பிய அதிருப்தி குரல் பல்வேறு ரூபங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த போராட்டத்தில் அவர், 'வரக்கூடிய அதிகாரிகள் எங்களிடம் அரசு விழா நடக்கிறது. சாமியானா அமையுங்கள். கார்பெட் விரியுங்கள். முந்திரி, திராட்சை, மினரல் வாட்டர் வாங்கிக் கொடுங்கள், மக்களுக்கு உணவு வாங்கிக் கொடுங்கள் என உத்தரவு போடுகிறார்கள். விழாவிற்கு வரும் அமைச்சர்களுக்கு உணவு உட்பட அத்தனை பணிவிடைகளையும் செய்யச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது? நம் மாமன், மச்சான்களுக்குக்கூட ஜி பேயில் ரூபாய் அனுப்ப முடியல, அண்ணன், தம்பிக்கு ஐயாயிரம் போட முடியல' என அவர் எழுப்பிய அதிருப்தி குரல், அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் ஒருமித்த குரலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
இதுகுறித்து அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் பேசியபோது கொட்டித் தீர்த்தார்கள். 'ஒரு அரசு விழா என்றால் மேடை, சாமியானா, நாற்காலி, பயனாளிகளை அழைத்து வருதல், உணவு கொடுத்தல், அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு பரிசுப் பொருட்கள், மைக் செட் அத்தனைக்கும் அரசு தரப்பிலிருந்து நிதி வருவதில்லை. அந்தந்த பகுதி ஒப்பந்ததாரர், கனிமவளம், ஆர்.டி.ஓ. ஆபீஸ், பத்திரப்பதிவு, சுற்றுச்சூழல், டாஸ்மாக் என குறிப்பிட்ட வளம் கொழிக்கும் துறைகளிடம் பேசி பணம் பெற்றுதான் விழாக்கள் நடக்கின்றன.
சமீபத்தில் கரூரில் நடந்த முதல்வர் விஜய் பங்கேற்ற நிகழ்வில் 400 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. முதல்வர் தொடங்கி வைத்த தனியார் தொழிற்சாலை புண்ணியத்தால், அந்த உணவு கிடைத்தது. இல்லையென்றால், யாரிடமாவது அதிகாரிகள் கையைப் பிசைந்துகொண்டுதான் நிற்க வேண்டியிருக்கும். முதல்வர் விழாவிலேயே இப்படி என்றால், வாரம்தோறும் நடக்கும் மனுநீதி நாள், நலத்திட்ட விழாக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை புதிய அரசு யோசிக்க வேண்டும்.
முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், அரசு செயலர்கள், இயக்குநர்கள், மத்திய அரசு அதிகாரிகள், சட்டமன்றக் குழு உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அவர்களது குடும்பத்தினர் என மாதம் முழுவதும் விசிட் அடிக்கும் வி.வி.ஐ.பி.க்களுக்கு பணிவிடை செய்வதில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், அதிகாரிகள் படும் பாடு முதல்வருக்கு தெரியாது.
முக்கிய நகரங்களில் பணிபுரியும் வருவாய்த்துறையினர், 'விசிட் டூட்டி' அல்லது 'ஸ்பெஷல் டூட்டி' என்ற பெயரில் விருந்தோம்பல் பணியில் விடுமுறை நாள் உட்பட மாதம் முழுவதும் ஈடுபட வேண்டியுள்ளது. வி.வி.ஐ.பி.க்களுக்கு தங்கும் அறை தொடங்கி அன்றாட தேவைகள் அத்தனையும் ஏற்பாடு செய்ய வேண்டும். நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தர வேண்டும். ஆடம்பரமான உணவு தர வேண்டும். வசதியான வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். கோயில், சுற்றுலா தளங்களுக்கு செல்ல விரும்பினால், அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் புறப்படும்போது, பரிசு கொடுத்து வழியனுப்ப வேண்டும்.
கடந்த ஆட்சியில் நடந்த மகளிர் உரிமைத் தொகை திட்ட முகாம், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கான செலவுத் தொகையை இன்று வரை பாக்கி வைத்து கட்டும் அலுவலர்கள்கூட உள்ளனர். இவ்வளவு ஏன், ஆண்டுதோறும் நடக்கும் குடியரசு தினம், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான செலவுகளுக்கு அதிகாரிகள் படும் துயரம் சொல்லி மாளாது. இவை தவிர, பணியாளர் பற்றாக்குறையால், தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்தி பல துறைகளிலும் அவர்களுக்கான சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. எழுதுபொருள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் பற்றாக்குறைக்கான தேவை அனைத்துமே 'மாமூல்' மூலமே கிடைக்கின்றன.
இவையெல்லாம் கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கங்கள். இவற்றில் அடிப்படையில் இருந்து மாற்றம் கொண்டு வர வேண்டும். அதை விடுத்து லஞ்சம், ஊழலை ஒழிக்கிறேன் என்று அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரையும் குற்றவாளிகளாக பார்த்தால், அதன் விளைவை ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்" என்றார்கள்.
இந்த கொதிப்புகளின் வெளிப்பாடே, பல்வேறு இடங்களில் தொடங்கியுள்ள அரசு ஊழியர்களின் போராட்டங்கள். இதோடு ஆர்.டி.ஓ. அலுவலகம், உள்ளாட்சி அமைப்புகள், பதிவுத்துறை, மின்சாரத்துறை என பல்வேறு துறை அலுவலகங்களில் தற்போது நடந்துவரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் சாமியாட காரணமாக அமைந்துள்ளது.
அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்படுவது வழக்கமான நடைமுறை. தற்போதைய சோதனையில், அலுவலர்களின் ஜிபே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கோவை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அலுவலர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசு ஊழியர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு தீர்வாக சமூக ஆர்வலர்கள் நம்மிடம், "அரசு விழாக்கள் என்ற பெயரில் நடக்கும் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை விழா எடுத்து வழங்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்ற வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்க மாநில பொதுச்செயலாளர் சு.சங்கரலிங்கத்திடம் பேசினோம். “மனுநீதி நாள் தொடங்கி அரசு விழாக்கள், முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது செய்யப்படும் செலவுகளுக்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு நிலையான ஸ்டாண்டிங் ஆபரேட்டிவ் சிஸ்டம் கொண்டுவர வேண்டும். லஞ்சம் ஒழிய வேண்டும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
மத்திய அரசு ஊழியர்கள் ரூ.5000 வரை கையில் வைத்திருக்கலாம் என்ற விதிமுறை இருப்பதுபோல், மாநில அரசு ஊழியர்களுக்கு விதிமுறை இல்லை. இதனால், சொந்த தேவைக்கு வைத்திருக்கும் பணத்தைக்கூட லஞ்ச பணமாக கருதும் சூழல் ஏற்படுகிறது. இதை மாற்ற ஓர் அரசு ஊழியர் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என நிர்ணயம் செய்ய வேண்டும். பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களின் நடைமுறை பிரச்னைகளை முதல்வர் விஜய் அறிந்துகொள்ள வேண்டும். அதற்குரிய சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும்" என்றார்.
அரசு இயந்திரத்தின் அச்சாணியாக விளங்கும் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு, அரசு நிர்வாகம் தடையின்றி நடைபெற அவசிய கோரிக்கைகள் என அடுத்தடுத்த அம்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள விஜய் சர்க்கார், இந்த புதிய வில்லன்களை எப்படி கையாளப்போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வி.
குமுதம் செய்திகளுக்காக எஸ்.கோவிந்தராஜ்
What's Your Reaction?

