எம்ஜிஆர் மாளிகைக்கு GOOD BYE... விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமான செம்மலை!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்துள்ளார்.
தாராபுரத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில் செம்மலை அக்கட்சியில் இணைந்தார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்யபாமாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், இதற்காக தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விஜய் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த நிலையில், செம்மலையும் அங்கு வந்தார். அப்போது விஜய், த.வெ.க. கட்சித் துண்டை செம்மலைக்கு அணிவித்து அவரை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் இருந்து விலகிய செம்மலை
முன்னதாக, அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக செம்மலை அறிவித்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனக்கு கட்சியில் உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தொடர்ந்து அ.தி.மு.க.வில் பயணிக்க மனம் இடம் தரவில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
செம்மலையின் அரசியல் பின்னணி
2001-ம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மலை, அப்போது சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகியிருந்த செம்மலை தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளார். இதன் மூலம் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரக் களத்தில் கட்சிமாறுதல் தொடர்பான அரசியல் நடவடிக்கையும் இடம்பெற்றுள்ளது.
What's Your Reaction?



