பழைய ஓய்வூதியத் திட்டம்: புறமுதுகு காட்டுவது ஏன்? திமுக அரசுக்கு விஜய் கேள்வி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என திமுக அரசை கடுமையாக சாடி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Mar 23, 2025 - 17:59
பழைய ஓய்வூதியத் திட்டம்: புறமுதுகு காட்டுவது ஏன்? திமுக அரசுக்கு விஜய் கேள்வி
TVK VIJAY press release about old pension scheme

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக முழுமையான ஆதரவினை வழங்குவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

”அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள். ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.”

பழைய ஓய்வூதியத் திட்டம் என்னாச்சு?

”1-4-2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS Old Pension Scheme) வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு CPS (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பணி ஓய்விற்குப் பிறகு மாதாமாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உட்பட எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முக்கிய அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனத்தில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.”

பேச்சுவார்த்தை என்பது வெறும் கண்துடைப்பே:

”அரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு செய்ய முன்வரவில்லை. அதை விடுத்து. கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் தி.மு.க. அரசு ஏமாற்றி உள்ளது.”

புறமுதுகு காட்டுவது ஏன்?

”பழைய ஓய்வூதியத் திட்டமானது ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் அதை மீண்டும் கொண்டுவரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?

தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் தி.மு.க. அரசுக்கு, இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

இதுபோன்ற பாராமுகச் செயல்களால், அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து, கையறு நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தான் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow