ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தம் தருதா? EPS அளித்த நச் பதில்
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சசிகலா மற்றும் ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைத்துக் கொள்ளச் சொல்லி பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? என பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு அப்படியெல்லாம் எந்த திட்டமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
”தினந்தோறும் அதிமுக பற்றி ஏதாவது செய்தி வரவேண்டும்னு நீங்களா கண்ணு, காது, மூக்குனு வச்சு கற்பனையா கேள்வி கேட்குறீங்க? 100 சதவீதம் அப்படியில்லை. நீங்க சொன்ன நபர்களை எல்லாம் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் திட்டம் எதுவுமில்லை” என குறிப்பிட்டார். ராஜ்ய சபா சீட் பாமகவிற்கு வழங்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு, “ராஜ்ய சபா குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வெளியிடப்படவில்லை. பரப்பரப்பான செய்தி உங்கள் ஊடகத்தில் வர வேண்டும்.. அதற்கு நான் தான் கிடைச்சனா பா? என பதிலளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
கொள்கை வேறு.. கூட்டணி வேறு:
மேலும் பேசுகையில் ”அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு. கொள்கை நிலையானது, கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரியை முறியடிக்க வியூகம் அமைத்து அதிக வாக்குகள் பெற்று எதிரியை வீழ்த்துவது. திமுகவை போல் நிரந்தரமான கூட்டணி கிடையாது. அப்படி ஒரு கூட்டணி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் எதற்கு தனி தனி கட்சிகள்? அனைத்தையும் ஒன்றாக இணைத்து விடலாமே. அதிமுகவைப் பொறுத்தவரை மக்கள் பிரச்சினையை பேசும் கட்சி. ஆனால் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை”
”முதலமைச்சருக்கு தவறான புள்ளி விவரங்கள் தந்துள்ளனர். தங்கம், வெள்ளி விலை நிலவரம் போல் கொலை நிலவரம் பற்றி செய்திகள் வெளியாகிறது. அதன் அடிப்படையில் தான் நாங்களும் பேசுகிறோம். தங்கள் அரசின் மீது குறை கூறவில்லை நடைபெறும் சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறோம். சாலையில் செல்பவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் ஜாகீர் உசேன் வெட்டி கொல்லப்படுகிறார். காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டவருக்கு பாதுகாப்பு தரவில்லை. மாறாக கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கிறது. குரல் பதிவு வெளியிட்டு தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார் அதையும் பொருட்படுத்தவில்லை.”
பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றியது திமுக:
”திமுக ஆட்சியில் இன்று இருப்பவர்கள், நாளை உயிருடன் இருப்போமா, இல்லையா என்று தெரியாது. என்ற நிலைதான் உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. திமுக, கவர்ச்சிகரமான திட்டத்தை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்ற பிறகு அந்தர் பல்டி அடிப்பார்கள். திமுகவின் வாக்குறுதியை நம்பி அனைவரும் உருகி போய் ஓட்டு போட்டார்கள். இப்போது காய்ந்து போய் போராட்டம் நடத்துகிறார்கள். அதிமுகவை பொருத்தவரை மக்களுக்கு எது நல்லதோ? அதை செய்வோம். அதே நேரத்தில் நிதி நிலைமையையும் பார்ப்போம். அதிமுக மக்களை காக்கும் அரசாக இருந்தது. அதனால் தான் மக்களிடம் செல்வாக்கு குறையாமல் இருக்கின்றோம்” என பத்திரிகையாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
What's Your Reaction?






