நான் இந்தியா வர திட்டமிட்டுள்ளேன்.. பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் முதல் பேட்டி

"நான் என் தந்தையின் சொந்த நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன்” என சுனிதா வில்லியம்ஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Apr 1, 2025 - 11:39
Apr 1, 2025 - 11:42
நான் இந்தியா வர திட்டமிட்டுள்ளேன்.. பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் முதல் பேட்டி
NASA's SpaceX crew-9 press meet

போயிங் ஸ்டார்லைனர் (Boeing's starliner) விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். கிட்டத்தட்ட 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கியிருந்த வீரர்கள், ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூல் (spaceX's Dragon capsule) மூலமாக கடந்த மார்ச் 19 ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டு பூமிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிகழ்விற்கு பிறகு, முதன் முறையாக நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 (NASA's SpaceX crew-9) வாஷிங்டனில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. அப்போது இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், ”நான் விண்வெளியில் தங்கியிருந்த 9 மாதங்களில் ஒவ்வொரு முறையும் தனது விண்கலம் இமயமலையினை கடக்கும் போது இந்தியா ரொம்ப அற்புதமாக இருப்பதை கண்டு நெகிழ்ந்துள்ளேன். எனது தந்தையின் பூர்விக நாடான இந்தியாவிற்கு நான் திரும்பிச் செல்ல திட்டமிட்டுள்ளேன். அப்போது அங்குள்ள மக்களை சந்திப்பதோடு, இஸ்ரோவின் விண்வெளி வீரர்களை சந்தித்து உரையாடவும் ஆர்வமாக உள்ளேன்” என குறிப்பிட்டார்.

காரமான உணவு தருவோம்: சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் தாயார் பெயர் உர்சுலின் போனி பாண்டியா (Nee zalokar). இவர் ஸ்லோவேனியன்-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். சுனிதா வில்லியம்ஸின் தந்தையான  தீபக் பாண்டியா இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில், விண்வெளியில் தான் பெற்ற அனுபவத்தை இஸ்ரோவின் விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ள வில்லியம்ஸ், விண்வெளித் துறையில் இந்தியா தன் காலடி தடத்தை ஆழமாக பதித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய விரும்புகிறேன் எனவும் சுனிதா வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு நீங்கள் வரும் போது உங்கள் குழுவினரையும் அழைத்துச் செல்ல திட்டம் உள்ளதா? என பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ், “நிச்சயமாக.. அவர்களுக்கு இந்திய உணவு ஸ்டைலில் காரமான உணவு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

விண்வெளியிலிருந்து இந்தியா எப்படி இருக்கிறது?

இந்தியாவின் புவியியல் தன்மை குறித்து விரிவாக பேசிய சுனிதா வில்லியம்ஸ், “பாறைத் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இமயமலை உருவாகி இந்தியாவின் புவியியல் நிலப்பரப்பு தற்போதைய வடிவில் அமைந்திருப்பதை காண ஆச்சரியமாக உள்ளது. நான் விண்வெளியில் தங்கியிருந்த போது, இமயமலைக்கு மேலே பறக்கும் போது சில நம்பமுடியாத படங்கள் கிடைத்தன. இந்திய நிலப்பரப்பின் பன்முகத்தன்மை விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பிரம்மிக்க வைக்கும்.

விண்வெளியிலிருந்து பார்க்கும் போது, நாடுகள் விளக்குகளின் வெளிச்சத்தை அடிப்படையாக கொண்ட வலையமைப்போல் (network) தெரியும். முக்கிய நகரங்கள் மிகவும் பிரகாசமாக இருக்கும். அந்த ஒளி வெளிச்சம் சிறிய நகரங்களில் குறைவாக இருக்கும். ​​குஜராத் மற்றும் மும்பை போன்ற பகுதிகளின் கடற்கரையில் பயணிக்கும் மீன்பிடிக் கப்பல்கள், நாங்கள் இந்தியா நோக்கி வருகிறோம் என்று ஒரு சிறிய சமிஞ்சைக் (signal) கொடுப்பதாக இருக்கும். இதை இரவிலும், பகலிலும் பார்ப்பதற்கு நம்பமுடியாததாக இருந்தது"  என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரோவும், தங்களது விண்வெளி திட்ட பணிகளில் வில்லியம்ஸூடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more: திடீர் வைராலகும் Studio Ghibli: ஆதரவோடு விமர்சனங்கள் எழுவது ஏன்?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow