வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? - 8
எவரையும் குறைத்து மதிப்பிடாமல் மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் மாண்புதான் உயர்ந்த பண்பு.
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? - 8
- மதுகேசவ் பொற்கண்ணன்
எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும். ஒருவர் பெற்றத் திறமை மற்றவரிடம் இல்லை என்பதற்காக அவரைக் குறைவாக எண்ணக்கூடாது. அவரவர்க்கு உரிய மரியாதையை அவரவர்க்குக் கொடுப்பதே உயர்ந்த மனிதர்களுக்கு அழகு.
தெரிந்த வரலாறு தான். சோழ ராஜ்ஜியத்தில் மகன் சிறுவனாக இருக்கும் பொழுது, மன்னர் இறந்து விட்டக் காரணத்தினால், அரசனின் மகனான சிறுவனே மன்னனாகப் பொறுப்பேற்கின்றார். ஒரு சமயம், அரசர் அவையில் இருக்கும் பொழுது, ஒரு வழக்குக்காக, நீதி வேண்டி இருவர் வருகின்றனர். ஆனால் மன்னவனைப் பார்த்ததும் இச் சிறுவனால் நமக்கு என்ன நீதி வழங்கிவிட முடியும் என்று எண்ணி, வழக்கைக் கூறுவதா வேண்டாமா என்று தயங்குகின்றனர். இதனை உணர்ந்த அந்த சிறுவனான அரசன் நீங்கள் இன்று போய் நாளை வாருங்கள் என்று அனுப்பி விடுகின்றார். மறுநாள் அவர்கள் வந்த பொழுது, மன்னனின் சிம்மாசனத்தில் வயதான மன்னர் ஒருவர் அமர்ந்திருக்கின்றார். இப்போது வழக்கு தொடுக்க வந்தவர்கள் இவரிடம் கூறலாம் என்று, தங்களுடைய வழக்கையும் தங்கள் பக்கத்து நியாயங்களையும் கூறுகின்றனர். அதனைக் கேட்டு அந்த மன்னர் நடுநிலையாக இருந்து சரியானத் தீர்ப்பை வழங்குகின்றார். வழக்கு தொடுத்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அப்போது இருவரையும் இருக்கச் சொல்லிவிட்டு, தனது வயதான வேடத்தைக் கலைத்து விட்டு, சிம்மாசனத்திற்கு வந்தவன் முதல் நாள் சிம்மாசனத்தில் இருந்த அதே சிறுவன்தான் இன்று சரியான தீர்ப்பு வழங்கிய வயோதிக வேடத்தில் இருந்த மன்னன் என்பதை உணர்ந்ததும் அவர்கள் வெட்கத்தால் தலை குனிக்கின்றனர். அவர்கள் மன்னனிடம் மன்னிப்பும் கேட்கின்றனர். இது கரிகாற் சோழன் சிறுவனாக இருந்து ஆட்சிப் பொறுப்பேற்றபோது நடந்ததாக கூறப்படும் வரலாற்றுக் கதை.
வியட்நாமில் கலகம் செய்தார்கள் எனக் கருதி, ஒரு ஆசிரியர் குடும்பத்தைப் பிரெஞ்சுப் படைகள் கொலை செய்யும் போது, அவர்களில் ஒரு சிறுவன் ஒல்லியாகவும், பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை, இவன் தானாகவே இறந்து விடுவான் என்று கேலி செய்துவிட்டுப் போய்விட்டனர். ஆனால், பிற்காலத்தில் அந்தச் சிறுவன்தான் ஃப்ரெஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி, அமெரிக்கப் படைகளையும் புறமுதுகிட்டு ஓடச் செய்த, வியட்நாமின் அதிபர் ஹோசிமின். உருவத்தைக் கண்டு குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
எனவே எந்தச் சூழ்நிலையிலும் ஒருவரைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அப்படி குறைத்து மதிப்பிட்டால், அப்படிக் குறைத்து மதிப்பிட்டவரின் தகுதியைத்தான் குறைத்துக் காட்டும்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 1975 ஆம் ஆண்டு முதன் முதலில் தொடங்குகின்றது. அப்போது 60 ஓவர்கள் விளையாட வேண்டும். அந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்கின்றது. 1979 இல் நடைபெற்ற இரண்டாவது உலகக் கோப்பைப் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியே வெல்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் இந்தியா படுதோல்வி அடைந்து திரும்புகின்றது. இதன் காரணமாக 1983 இல் நடைபெற்ற, மூன்றாவது உலகக் கோப்பைக்கு நடைபெற்றப் போட்டியில் இந்தியாவை எந்த நாடும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. 1983-இல் கபில் தேவ் தலைமையில் இந்தியா இங்கிலாந்துக்கு விளையாடச் சென்றது.
இந்த உலகக்கோப்பைப் போட்டியில் மூன்று அதிசயங்கள் நிகழ்ந்தன.
போட்டி தொடங்கியதும் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகளுடன் இந்தியா மோதுகிறது. கடந்த 1975, 79 ஆகிய இரண்டு கோப்பைகளையும் வென்று மாபெரும் ஜாம்பவானாக மேற்கிந்தியத் தீவுகள் அணி விளங்கியது. கிளைவ் லாயிட், விவின் ரிச்சர்ட், ஆன்ட்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஃகார்னர், மார்ஷல், கிரீனிட்ஜ் என அன்றைய கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்தவர்கள். "ராபர்ட்ஸ் என்றால் விக்கெட்டும் நடுங்கும்" என்பது அப்போதையப் பிரபலமான பழமொழி. ஆனால் அந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது; உலகமே வியந்தது; இது ஏதோ ப்ளூக் அல்லது அதிர்ஷ்டம் என்றது கிரிக்கெட் விமர்சனங்கள். இது முதல் அதிசயம்!
தகுதிச் சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வே அணியுடன் இந்தியா மோதும் பொழுது 17 ரன்னுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் தோல்வியின் விளிம்பில் இருந்தது இந்தியா. அப்போதெல்லாம் ஐந்து விக்கெட் விழுந்தாலே மீதி 5 விக்கெட்டுகள் இரண்டு மூன்று ஓவரில் ஆல் அவுட் என்பது எழுதப்படாத ஒன்று. இந்த நிலையில் கேப்டன் கபில்தேவ் பட்டாசாக வெடித்து சிக்ஸர் ஃபோர் என ரன் மழை பொழிந்தார். 175 ரன்கள் எடுக்கின்றார். அந்தப் போட்டியில் இந்தியா வென்றது. இது இரண்டாவது அதிசயம்!
பின் நடந்ததுதான் வரலாறு. அரை இறுதிக்கு முன்பு ஆஸ்திரேலியாவையும், அரை இறுதியில் இங்கிலாந்தையும், இந்திய அணி வெல்கின்றது. இறுதிப் போட்டி மேற்கிந்தியத் தீவுகளுக்கும், இந்தியாவுக்கும் நடைபெற்றது. அப்போதும் கூட இந்தியாவைத் துச்சமாக எண்ணித்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தில் இறங்கியது. முதலில் பேட் செய்த இந்தியாவை 183 ரன்னுக்கு சுலபமாக அவுட் செய்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இது 60 ஓவரில் 183 என்பது மிகவும் லோ ஸ்கோர். எனவே எளிதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்று விடும் என்று எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் வீறு கொண்டு எழுந்த இந்தியா 140 ரன்களுக்கு மேற்கிந்தியத் தீவுகளை ஆல் அவுட் செய்து, முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்தியா! இது மூன்றாவது அதிசயம்!
மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்று விட்டதாகவே கருதி இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்டது மேற்கிந்தியத் தீவுகள் அணியும் கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும்! ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட இந்திய அணிதான் இறுதியில் வென்றது. உலகமே வியந்தது! விமர்சகர்களும் பத்திரிகைகளும் இந்தியாவை "டார்க் ஹார்ஸஸ் வென்றது" என்று புகழ்ந்தனர்.
மற்ற நாடுகள் இருக்கட்டும்; இந்தியாவுக்காக விளையாடச் சென்ற தொடக்க வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கூட சமீபத்திய ஒரு பேட்டியில், " "1983 இல் உலகக் கோப்பைக்கு விளையாட சென்ற பொழுது, ஏதோ டூர் செல்வது போலத்தான் நானும் சென்றேன்; எனக்கு அப்போது திருமணம் ஆகி இருந்ததால் எனது மனைவிக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுக் கொண்டு தேன்நிலவுக்குச் செல்வது போல இங்கிலாந்துக்குச் சென்றோம். நாங்கள் போட்டியை வெல்வோம் என்று கனவிலும் நினைக்கவில்லை" - என்று கூறியிருந்தார்.
இந்த நிகழ்வில் இருந்து ஒரு நாட்டையோ, ஒரு அணியையோ, ஒரு குழுவையோ, ஒரு தனி நபரையோ எந்தச் சூழ்நிலையிலும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பது புரிகிறது அல்லவா? அவ்வாறு குறைத்து மதிப்பிட்டவர்கள் தான் இறுதியில் தோல்வி அடைவார்கள் என்பதற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவே போதுமானது; அதுவே நடைமுறை உண்மையானது.
எவரையும் குறைத்து மதிப்பிடாமல் மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் மாண்புதான் உயர்ந்த பண்பு. இதுதான் என்றும் வெல்லும். நானே பலசாலி! நானே உயர்ந்தவன்! நீ பலம் இல்லாதவன்! உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற உயர்வு தாழ்வு கொண்டு எவரையும் குறைத்து மதிப்பிடும் தன்மைதான் பேதமை என்று காலம் உணர்த்தி விடும்!
இதைத்தான் -
"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்/ தீரா இடும்பை தரும்"- - என்னும் குறளில்;
மற்றவர்களைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் அவர்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்தால் அது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவருடைய வழிமுறையில் தோன்றிய அனைவருக்கும் தீராதத் துன்பத்தைக் கொடுக்கும் என்கின்றார் வள்ளுவர்.
எவரையும் குறைத்து மதிப்பிடாமல் பழகும் நண்பர்களுக்கு எப்போதும், "லைப் இஸ் பியூட்டிஃபுல்"-தான்!

மதுகேசவ் பொற்கண்ணன்
What's Your Reaction?

