தேர்தல் முடியும் வரை பட்டாசு விற்கக் கூடாது.. மீறினால் நடவடிக்கை.. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி விருதுநகரில் பட்டாசு கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 17) மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இந்த நிலையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படக்கூடிய பொருட்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்படும் ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள் அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் (ஏப்ரல் 17) தேர்தலுக்கு மறுநாள் (ஏப்ரல் 20) வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது ஜூன் 2 முதல் வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் (ஏப்ரல் 5) வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மேற்படி காலகட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்து, விருதுநகர் மாவட்டத்திற்கு பட்டாசுகள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கைகளை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?