ஒரே ஒரு ட்வீட்டால் வந்த சிக்கல்...கம்பி எண்ணி களி தின்னப்போகும் எஸ்.வி.சேகர்? ஆனாலும் ஒரு ஆறுதல்...

Feb 19, 2024 - 15:14
Feb 19, 2024 - 15:47
ஒரே ஒரு ட்வீட்டால் வந்த சிக்கல்...கம்பி எண்ணி களி தின்னப்போகும் எஸ்.வி.சேகர்? ஆனாலும் ஒரு ஆறுதல்...

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒருமாதம் சிறைதண்டனை விதித்திருந்தாலும், அவரது கோரிக்கையை ஏற்று தண்டனையை நிறுத்தி வைக்கவும் கால அவகாசம் வழங்கியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து  எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான கருத்துகளை பகிர்ந்தும்,  தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாகவும், எஸ்.வி.சேகருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த இரு வழக்குகளும் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்-கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் அதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கின் விசாரணைக்காக நடிகர் எஸ்.வி.சேகர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அப்போது, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதோடு, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறைதண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஒரு மாதம் கால அவகாசம் வழங்கியும் தீர்ப்பளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow