கிரிவலம் செல்லும் போது எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்?
ஆன்மிக பக்தர், கிரிவலம் செல்லும் போது எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்? என எழுப்பிய கேள்விக்கு கே.குமாரசிவாச்சாரியார் அளித்த பதிலின் விவரம் காண்க

குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழில் ஆன்மிகம் தொடர்பாக வாசகர்கள் வினவும் கேள்விகளுக்கு, கே.குமாரசிவாச்சாரியார் தொடர்ந்து பதில் அளித்துவருகிறார். சமீபத்தில் வெளியான இதழில், அச்சரப்பாக்கம் பகுதியை சார்ந்த அர்ச்சனா அவர்கள் கிரிவலம் செல்லும் போது எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு கே.குமாரசிவாச்சாரியார் அளித்த பதில்களின் விவரம் பின்வருமாறு- ‘‘மலைமீது எந்தச் சாமி கோயில் கொண்டுள்ளதோ, அதன் தியான மந்திரம், பாடல்களைக் கூறுவதுதான் முறை. இக்காலகட்டத்தில் திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஆடிக்கொண்டு ஆரவாரம் செய்தபடி செல்கின்றனர். உதாரணத்திற்கு, ‘எப்பா... எப்பா... ஐயப்பா... கண்ணுல காசைக் காட்டப்பா!’ என்று பாடிச் செல்வதெல்லாம் கூடவே கூடாது.
மனதை அமைதிப்படுத்தி, ‘இறைநாமம்’ சொல்லியபடிப் பொறுமையாக நடந்து செல்லவேண்டும். பெருமாள் தொடர்பான மலை எனில், ஆழ்வாராதிகளின் பாசுரங்கள்; சிவன் அமர்ந்த மலை எனில், நால்வர் பெருமக்கள் அருளிய தேவாரப் பதிகங்கள் பாட வேண்டும். முருகன் மலையைச் சுற்றும் போது ‘அரோகரா’ கோஷத்துடன் சுப்ரமண்ய மூலமந்திரம், சடாட்சர மந்திரம் அல்லது கவசங்கள் கூறலாம்.
குறிப்பாக, மலையை வலம்வரும் போது இரண்டாவது அடுக்குகளில் மலையின் அடுத்த முகடுகளில் இதர தெய்வங்கள் இருந்தால், அந்தத் தெய்வங்கள் குறித்த அருட்பாடல்களைப் பாடியும் வலம்வரலாம். உதாரணமாக, விஷ்ணுவின் மலையைச் சுற்றும்போது, அனுமன் சிலை இருக்கும்.’’
கேள்வி: மகாபாரதத்தில் விதுரர், ‘விதுரநீதி’ எழுத எதற்காக முற்பட்டார்? (கயல்விழி கோபி, வேடசந்தூர்)
‘‘வனவாசத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பாண்டவாகளைச் சமாதானப்படுத்த விரும்பினான், திருதராஷ்டிரன். எனவே, தன்னுடைய அமைச்சரான சஞ்சயனை அவர்களிடம் தூது அனுப்பிவிட்டு, மிகுந்த மனக்கலக்கத்தோடு விதுரரை அழைத்தான். திருதராஷ்டிரன் தமயனான விதுரர், சகோதரரின் மனக்கலக்கத்தைப் போக்கும் விதமாக தன்னுடைய வாக்கால் நீதி உரைத்து, ‘அவர்களால் எந்தப் பிரச்னையும் வராது’ என்று திருப்திப்படுத்தினான். விதுரரின் விளக்க உரைகள் மகாபாரதத்தில் ‘உத்யோக பர்வ காண்டத்தில்’ 8 அத்தியாயங்களாக விளக்கப்பட்டுள்ளன.
அவற்றிலிருந்து சில துளிகள்...
விருப்பு, வெறுப்பு, பலம், ஆசை, செல்வம், ஏழ்மை ஆகியவற்றால் தன்னுடைய செயல்களைத் தடுப்பதற்கு இடம்கொடுக்காதவனே ‘விவேகி’. அழையாத வீட்டிற்குள் நுழைபவனும், கேட்காதபோது அதிகம் பேசுபவனும், தகுதியற்றவனிடம் அதிகம் நம்பிக்கை வைத்திருப்பவனும் மனிதர்களுள் நீசமானவன். மன்னித்தல் ஒவ்வொரு தடவையும் தரப்படுகிறபோது வெற்றி கிடைக்கிறது. தர்மம் மட்டுமே அதிகமான பயனைத் தரவல்லது. மன்னிப்பு ஒன்றே நிரந்தர சமாதானம், திருப்தி தரக்கூடியது. கொடுஞ்சொற்களை ஒருபோதும் பயன்படுத்தாத மனிதனுக்கு உலகில் புகழ் கிடைத்துவிடுகிறது’’ என கே.குமாரசிவாச்சாரியார் பதிலளித்துள்ளார்.
குமுதம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கினை க்ளிக் செய்து எங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறவும்
குமுதம் செய்திகள்- வாட்ஸ் அப் குழு
What's Your Reaction?






