நல்ல காரியத்திற்கு செல்லும் போது ஏன் 3 பேராக போகக்கூடாதுனு சொல்றாங்க?

ஆலயங்களில் தங்கத்தேர் இழுக்கப்படுவது எதனால்? நல்ல காரியத்திற்கு செல்லும் போது ஏன் 3 பேராக போகக்கூடாது? போன்ற கேள்விகளுக்கு கே.குமாரசிவாச்சாரியார் பதிலளித்துள்ளார்.

Apr 19, 2025 - 15:36
நல்ல காரியத்திற்கு செல்லும் போது ஏன் 3 பேராக போகக்கூடாதுனு சொல்றாங்க?
நல்ல காரியத்திற்கு செல்லும் போது ஏன் 3 பேராக போகக்கூடாதுனு சொல்றாங்க?

குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழில் ஆன்மிகம் தொடர்பாக வாசகர்கள் வினவும் கேள்விகளுக்கு, கே.குமாரசிவாச்சாரியார் தொடர்ந்து பதில் அளித்துவருகிறார். சமீபத்தில் வெளியான இதழில், பண்டாரவிளை பகுதியை சார்ந்த எம்.பரமசிவம் அவர்கள் நல்ல காரியத்திற்குச் செல்லும்போது, மூன்று பேராகச் செல்லக்கூடாது என்கிறார்களே? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கே.குமாரசிவாச்சாரியார் அளித்த பதிலின் விவரம் பின்வருமாறு-

கேள்வி: நல்ல காரியத்திற்குச் செல்லும்போது, மூன்று பேராகச் செல்லக்கூடாது என்கிறார்களே... எதற்காக? (எம். பரமசிவம், பண்டாரவிளை)
 
‘‘ஒற்றைப்படையில் ஒருவராகச் சென்றால், போகுமிடத்தில் தகுந்த செல்வாக்கு, மரியாதை கிடைக்காது என்பதற்காக மூவரை நால்வராகப் போகும்படிச் சொன்னார்கள். ‘நல்ல காரியம் பேசப்போறே... நாலு பேரை அழைச்சிட்டு போ...என்ற சொல்வழக்கைக் கேட்டிருப்பீர்கள்தானே?

ஒரு வீட்டில் பெண் கேட்க, அப்பா மட்டும் தனியாகப் போனால், ‘உங்களுக்குக் குடும்பம் ஏதும் இல்லையா?’ என்று பெண்வீட்டார் கேட்பார்கள். அதேசமயம், அதிகமான நபர்களைக் கூட்டிக்கொண்டு போனாலும், ‘இது, பெரிய குடும்பம் போல! அதனால், நிறைய பிரச்னைகளை நாம் சந்திக்கவேண்டி வரும்’ என்று திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார், இளம்பெண். 

பொதுவாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் போகவேண்டாம் என்பதற்காக 8, 10, 12, 16 நபர்களோடு நல்ல காரியத்திற்குப் போய் வரலாம். ஒரு குடும்பத்தில், ஒரு பெண் மட்டும் பிறந்து, அவளுக்காக ஓர் ஆண் மகனைத் தேர்ந்தெடுக்கும்போது, இன்னொரு உறவினரையும் அழைத்துக்கொண்டு போவது, பலராகச் சென்று வருவது, குலதெய்வ பூஜை, விழா எடுத்தலுக்கு குடும்பமாகக் கூடுவதிலும் இந்த நடைமுறைப் பின்பற்றப்பட்டு வருகிறது.’’ 

கே: ஆலயங்களில் தங்கத்தேர் இழுக்கப்படுவது எதனால்? என்ன பலன் கிடைக்கும்? (விமலா விஸ்வம், வில்லிவாக்கம்)
 
‘‘ஆலயத்திற்குச் சென்று வழிபடாதவர்களைக் காண, இறைவனே தேரில் எழுந்து, வீதிக்கு வந்து ஆசி வழங்குவதாக ஐதிகம். ஆடை, அலங்காரம், வாத்தியம் முதலியவற்றை இந்தத் தேர்த்திருவிழாவில் தான் காணமுடியும். மூலமூர்த்தியாக உள்ள இறைவன், உற்சவ காலங்களில் வீதியில் எழுந்தருளுவதற்குக் காரணம் உண்டு. மக்கள், ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு வழிபடவேண்டும் எனச் சொல்வதுதான் இந்த விழாவின் விதி.

மரங்களால் உருவாக்கப்பட்ட ஆழித்தேர் மட்டுமே தெருக்களில் வலம்வருவது வழக்கம். தங்கத்தேர் இழுப்பது பக்தர்களின் பிரார்த்தனையின் பொருட்டு, சுபதினங்களில் அடிக்கடி நடைபெறும் நிகழ்வு. மூன்று முதல் ஐந்து பிராகாரங்கள் உள்ள கோயில்களில் 2-ம் பிராகாரத்தில் மட்டுமே தங்கத்தேர் இழுப்பது வழக்கம். தங்கத்தேர் இழுப்பதால், தாங்கள் கோரிய பலன் கிடைப்பதாக நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறிய பிறகும் தங்கத்தேர் இழுப்பது நடைமுறையில் உள்ளது.’’ என கே.குமாரசிவாச்சாரியார் பதிலளித்துள்ளார்.

குமுதம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள பின்வரும் லிங்கினை பயன்படுத்தி எங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறவும்

குமுதம் செய்திகள்- வாட்ஸ் அப் குழு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow