வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? - 5

குற்றமே என்றாலும் அதனைச் சீர்தூக்கி சம்பந்தப்பட்டவர்களிடத்தே கூறுவதுதான் சிறந்த மாண்பாக இருக்க முடியும்.

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? - 5
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? - 5

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? - 5

- மதுகேசவ் பொற்கண்ணன்

தமிழ்நாட்டில் ஒரு பழக்கம் பொதுவாக இருக்கிறது. ஒருவர் பேச ஆரம்பித்ததும் அதை முழுசாகக் பேச விடுவதில்லை. பாதியிலேயே அதைக் கேட்பவர் தானே ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு, " இப்படித்தான் போன மாசம் ......" என்று இடை மறித்து பேச ஆரம்பித்து விடும் 'நல்ல பழக்கம்' தான் அது!  முதலில் பேச ஆரம்பித்தவர் பொறுமையாக இருந்து தான் ஆக வேண்டும். பின்பு,  அவர் 'நான் சொல்ல வந்தது அது இல்லைங்க.....'  - என்று வேறு ஒரு விஷயத்தைக் கூறுயதும்,  இடைமறித்த நபர் அதையும் சமாளிப்பார் பாருங்கள், ஆஸ்கார் கொடுக்கலாம்.  இப்போது செல்போன் யுகத்தில் கேட்கவே வேண்டாம் - இந்த அனுபவம் இன்னும் நிறைய ஏற்படுகின்றது. 

இந்த பழக்கம் எனக்கு கடந்த 2008 வரை இருந்திருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகப் பணியில் டெபுடேஷனில் பணியாற்றும்போது ஏற்பட்ட அனுபவம் இது. ஒருமுறை ஜப்பானிலிருந்து ஆய்வுக்குழு வந்திருந்தது. அவர்கள் மூன்று மாதத்திற்கு மேல் தங்க வேண்டி இருந்ததால், நிர்வாகப் பிரிவுதான்  அவர்களுக்கு உரிய வசதியை செய்து தர வேண்டும். நிர்வாக மேலாளர் என்னிடம் , "அவர்களுக்கு வைஃபை அல்லது நெட் தொடர்பு இடையூறு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்;  அதற்குள்  நான் அவசரக்குடுக்கை யாக பல முறை குறுக்கிட்டு, எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்தேன். அதற்கு அவர், 

'முதலில் நான் சொல்லுவதை முழுவதும் கேட்டுவிட்டு பதில் சொல்லுங்கள்'  என்பார். அப்புறம் பேசாமல் இருப்பேன். அடுத்து அவர்களுக்கு சிற்றுண்டி, லன்ச் போன்றவை....என்று கூற ஆரம்பிக்கும் போதே நான் வழக்கம்போல், அந்த ஹோட்டல் இந்த ஹோட்டல் என்று ஆரம்பிப்பேன்; அவர் எல்லாம் பேசி முடித்து ஏற்பாடு செய்து வைத்திருப்பது தெரியாமல்,  நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொண்டிருப்பேன். பின் அவர் கூறியபடி செய்து முடித்தால், அதுவே சரியாக இருக்கும், எளிதாகவும் இருக்கும். இது ஒரு நல்ல வாழ்க்கைப்பாடமாயனது எனக்கு.

எனது நிர்வாக மேலாளர் என்னைத் தனது பேச்சைக் கேட்க வைக்க எல்லாவித சாம தான பேத தண்டங்களை யெல்லாம் பிரயோகித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கோபமாக இருந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. அவர் எனக்கு ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுத்தர விரும்பி இருக்கிறார் என்று! அதன் பிறகு எவரிடமும் ஏதாவது சொல்ல விரும்பினால், காத்திருப்பேன்,  அவர்கள் தனது பேச்சை முடிக்கும் வரை! இதனால் பல வீண் விவாதங்கள் தவிர்க்கப்பட்டது. இதனால் பல நன்மைகள் இன்று வரை பெற்று வருகின்றேன். பெரும்பாலும் எல்லோருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். இது தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும்பொதுவாக அலுவலகம்  கடைகள், தொழிற்சாலைகள், உறவினர் நண்பர்கள் வீடுகளில் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் என்று இந்த முந்திரிக்கொட்டைத் தனமான பேச்சினால் பல பிரச்சினைகள் வந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதிலும் ஏதாவது வாகனம் அல்லது எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்கும் இடத்தில் ஒரு அரை மணி நேரம் வேடிக்கை பார்த்தால் போதும். சேல்ஸ்மேனும் சூப்பர்வைசரும் வாங்குவதற்கு  வந்திருப்பார்களிடம் மாட்டிக்கொண்டு வாங்க வந்திருப்பவர் இடையிடையே பேசி அவர்கள் படும்பாட்டை கவனித்திருக்கலாம். இது ஏன் நிகழ்கிறது? இது எப்படி இந்த நடைமுறை வந்திருக்கும்? ஏனென்றால் " நமக்குத் தான் எல்லாம் தெரியுமே"  என்ற அந்த 'பீட்ரு' மனோபாவம்தான், இதற்குக்  காரணமாக இருக்க முடியும்.

நீங்களும் முயன்று பாருங்கள். பிறர் சொல்வதை முழுமையாகக் கேட்டு விட்டு பேச ஆரம்பியுங்கள். உங்கள் வாழ்க்கையில் 90% பிரச்சனை முடிந்து விட்டது என்றே வைத்துக் கொள்ளலாம்.

இது ஒரு வகை பேச்சினால் ஏற்படும் பிரச்சனை என்றால், இன்னொரு வகையான பழக்கமும் இருக்கின்றது. நாம் ஒரு செய்தியை ஒருவரிடம் மிகவும் சாதாரணமாக கூறி இருப்போம். அதை மறந்தும் கூட இருப்போம். ஆனால் அதைக் கேட்டவர் மறக்காமல் அது ஏதோ குற்றம் சொன்னது போல எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவரிடமே சென்று 'தெரியுமா சேதி, அவன் இப்படிக் கூறினான்;அப்படிக் கூறினான்; எனக்கே ஆத்திரமாக வந்தது; " நானே ஷாக் ஆயிட்டேன்" ரகத்தில் கொஞ்சம் கரம் மசாலா எல்லாம் சேர்த்து பேச்சு சுவாரஸ்யத் துக்காகக் கூறிவிடுவார். அவ்வளவுதான். 

அடுத்த நாள், அங்கு பேச்சில், செயலில் மாற்றங்கள் இருக்கும். நமக்கு தான் தெரியாதே! நமக்கு எதும் புரியாது! என்ன நடந்தது என்றும் தெரியாது! சம்பந்தப்பட்டவர் நேரில் சொல்லவும் மாட்டார். நம்மிடம் அரைகுறையாகக் கேட்டுவிட்டு, பில்டப் செய்து சொன்னவர் தனக்கு ஏதும் தெரியாதது போல பேசிக் கொண்டிருப்பார் பாருங்கள்; அதற்கு அவருக்கு தேசிய விருதுக்குக் கூட பரிந்துரை செய்யலாம். பிற்காலத்தில் அது தெரிய வரும்போது, ஆளுக்கு ஒரு திசையில் பயணித்து, வாழ்வின் அலைகள் வேறு வேறு கரையில் சேர்த்துவிட்டிருக்கும். இது உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்றும்  கூறலாம். அல்லது, அனுகூலச் சத்துரு என்றும் கூறலாம். இதை தீர்ப்பதற்கு இந்தியா முழுவதும் மருந்தோ!  வைத்தியமோ! - ஏதும் கிடையாது.

ஆனால் அவரவர் மனத்தால் உணர்ந்து,  திருத்திக் கொண்டால் மட்டுமே பிழைக்க முடியும் இருதரப்பாரும். உறவும் நட்பும் தப்பிக்கும். அல்லது இப்படிப்பட்ட மனிதர்களைக் கண்டதும் பேருந்து நிலையத்தில் பார்க்கும் புதிய மனிதர்கள் மாதிரி பார்க்காதது போல நகர்ந்து விட வேண்டியதுதான். சும்மா பேச்சு கொடுத்தால் கூட போதும் பஸ்சை மாற்றி ஏற்றி விட்டு விடுவார்கள் நம்ப வைத்து! நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்!!

வள்ளுவர் இதையே,

"துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்/என்னைகொல் ஏதிலார் மாட்டு" (குறள் 188) எனும் குறளில், நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறி தூற்றும் இயல்புடையவர்கள் பழகாத அயலார் இடத்து என்ன செய்வாரோ? என்று கூறுகின்றார். 

வள்ளுவர் கூறும் மற்றொரு குறளான, 

" ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின்/ தீதும் உண்டோ மன்னும் உயிர்க்கு" குறள்(190) எனும் குறளை, கவியரசு கண்ணதாசன் ஒரு பாடலின் இடையே அழகாக கூறியிருப்பார்; 

"சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில்...மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா..."- என்று மிக எளிமையாக இந்த குறளினுடைய பொருளை அந்தப் பாடலுக்குள் வைத்திருப்பார் கவியரசர். ஜேசுதாஸ் அழகாக பாடியிருப்பவர்- 'யாருக்கும் வெட்கமில்லை' திரைப்படத்தில். வள்ளுவரின் புறங்கூறாமை என்னும் அதிகாரத்தின் 10 குறள்களும் ஒவ்வொருவர்  வாழ்விலும் பயன் தரக்கூடியக் கருத்துக்களாகும்.

குற்றமே என்றாலும் அதனைச் சீர்தூக்கி சம்பந்தப்பட்டவர்களிடத்தே கூறுவதுதான் சிறந்த மாண்பாக இருக்க முடியும். அதனால் அவர் திருத்திக் கொண்டு நல்ல நட்பாக,உறவாக அது பரிணமிக்க வாய்ப்பும் உள்ளது. அதை விடுத்து, பிறரிடம் புறம் கூறுவதால், என்ன விளைந்து விடப் போகின்றது? உறவையும் நட்பையும் இழந்து விடுவதுதான் மிஞ்சும்! தனிமனித இயல்புக்கு யார் தான் பொறுப்பு? அவரவரே அன்றி; பிறர் எவரும் காரணமில்லையே!! 

எல்லோரிடத்தும் இயல்புடனும், அன்புடனும், பிறரிடத்தில் இடைமறித்து இடைமறித்து பேசாமலும்,  ஒருவர் கூறியதைப் பிறரிடம் கூறாமலும்  பேச முயற்சித்துப் பாருங்கள்; அப்படியே பழகிப் பாருங்கள். அப்புறம் நீங்களும் கூறுவீர்கள் "லைப் இஸ் பியூட்டிஃபுல்" என்று!!



மதுகேசவ் பொற்கண்ணன்

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow