தெலுங்கு தேச வேட்பாளர் மீது தாக்குதல்.. Y.S.R. காங். கட்சியினர் அடாவடி.. திருப்பதி ஸ்ட்ராங் ரூமில் பரபரப்பு

May 15, 2024 - 09:20
தெலுங்கு தேச வேட்பாளர் மீது தாக்குதல்.. Y.S.R. காங். கட்சியினர் அடாவடி.. திருப்பதி ஸ்ட்ராங் ரூமில் பரபரப்பு

திருப்பதியில், சந்திரகிரி சட்டமன்ற தொகுதி தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் மீது ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் கட்சியினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 ஆந்திராவில், கடந்த 13-ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், திருப்பதி பத்மாவதி மகிளா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை ஆய்வு செய்வதற்காக, சந்திரகிரி சட்டமன்ற தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி காரில் சென்றார். பல்கலைக்கழகம் அருகே அவர் சென்று கொண்டிருந்த நிலையில், அங்கு கூடியிருந்த சந்திரகிரி தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மோகித்  ரெட்டி ஆதரவாளர்கள், அவரது கார் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். கற்கள், பீர் பாட்டில், சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதால், அந்த இடமே கலவர பூமியாக மாறியது. 

அப்போது, புலிவர்த்தி நானியின் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறை அதிகாரி மீதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கட்டையால் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவர் காயமடைந்த நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி இருமுறை சுட்டார். இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.