ஒரே மேக மூட்டமா இருக்கே.. இன்று எங்கெல்லாம் மழை வரும்? யாருக்கெல்லாம் குடை அவசியம்?..

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 18ம் தேதி வரையில் 8 முதல் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

May 15, 2024 - 10:36
ஒரே மேக மூட்டமா இருக்கே.. இன்று எங்கெல்லாம் மழை வரும்?  யாருக்கெல்லாம் குடை அவசியம்?..

தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி வரும் நிலையில், படிப்படியாக வெப்பத்தின் அளவும் குறைந்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகம், புதுவையில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. 

அதிகபட்சமாக ஈரோடு, திருத்தணி, வேலூர் பகுதிகளில் 102 டிகிரி வெயில் நிலவியது. திருப்பத்தூர், மதுரை, சென்னை, தர்மபுரி, நாமக்கல் 99 டிகிரி, கரூர் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பிற பகுதிகளில் 97 டிகிரி மற்றும் அதற்கும் கீழும் வெயில் இருந்தது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் 102 டிகிரி முதல் 111 டிகிரி வரை அதிகரித்து காணப்பட்ட வெயில் தற்போது அந்தப் பகுதிகளில் 100 டிகிரி முதல் 102 டிகிரியாக குறைந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் இயல்பை ஒட்டிய வெப்பநிலை நீடிப்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அத்துடன் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 18ம் தேதி வரையில் 8 முதல் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழையும் பெய்தது.

இதனால் காய்ந்து கிடந்த அருவிகள் உயிர்பெற்றுள்ளனர். திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையே தமிழ்நாட்டில் இன்று முதல் 18ம் தேதி வரையில் 8 முதல் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதற்கு பிறகு அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதற்கிடையே, வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியிலும் குமரிக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக் கடல் பகுதியிலும் உருவாகியுள்ள வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow