ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 2 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்பு..
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மாணிக்கா கிராமத்தில் கடந்த 12ம் தேதி 70 அடி ஆழமுள்ள ஆழ்துறை கிணற்றின் அருகே 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்த அச்சிறுவன் 40 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து மாநில பேரிடர் மீட்புப் படை (SDERF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் குழுக்கள் இணைந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்ட நிலையில், அவரை மீட்பதற்காக கிணற்றின் பக்கத்தில் குழி தோண்டப்பட்டது. 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் மீட்கப்பட்டாலும் அவரிடம் எந்த அசைவும் காணப்படவில்லை. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரதீபா, "சிறுவனை மீட்க அனைத்து முயற்சிகளையும் செய்தோம். ஆழ்துளை கிணறு மிகவும் குறுகலாக இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை" என தெரிவித்தார்.
What's Your Reaction?