சென்னையில் பேருந்து இருக்கைக்கு சண்டை.. ரத்தம் சொட்ட சொட்ட அடிதடி.. கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?
சென்னையில் அரசுப் பேருந்தில் இருக்கை பிடிப்பது தொடர்பாக 2 பயணிகள் இடையே கைகலப்பாகி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வேயில் இருந்து கலைஞர் நகரை நோக்கி 17d அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வள்ளுவர் கோட்டம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், இருக்கையில் அமர்வது தொடர்பாக இளைஞர் ஒருவருக்கும் நடுத்தர வயதுடைய ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் நடுத்தர வயதுடைய நபருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால் சக பயணிகள் பதற்றம் அடைந்தனர்.
தகராறு காரணமாக வள்ளுவர் கோட்டத்தில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி போலீசாரிடம் புகார் அளித்தார். அப்போது கீழே இறங்குடா உன்னை ஒருவழியா ஆக்கிறேன் என நடுத்தற வயதுடைய நபர் மிரட்ட, பதிலுக்கு அடித்து வாயை உடைத்துவிடுவேன் என அந்த இளைஞரும் கூறியதால், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிராட்வே - கலைஞர் நகர் வழித்தடத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி இதுபோன்று தகராறு ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டும் நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?