”அரசு - ஆளுநர் மோதல் தொடரக்கூடாது” - அன்புமணி
சட்டப்பேரவையில் தமிழக அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்தும், உரையில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் வாசிக்காமல் ஆளுநர் சென்றது தவறான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவைக்குறிப்பில் தமது தனிப்பட்ட கருத்தை நீக்கியதற்கு எதிராகவே ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அன்புமணி, கடந்தாண்டு ஆளுநர் உரையின் போது அவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்ததோ, அதே தான் தற்போதும் தொடர்வதாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரைக்கு அவரது அலுவலகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கும் அன்புமணி, உரைக்கு முன் தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று பதவிட்டுள்ளார். இதுசம்பந்தமாக, ஆளுநர் அலுவலகத்திற்கு சட்டப்பேரவைச் செயலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்த போதும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை என்றும் அன்புமணி கூறியிருக்கிறார்.
தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல்போக்கு புதிதல்ல என தெரிவித்துள்ள அன்புமணி, இருதரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உருவாகிவிடும் என்பதால், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்பட வேண்டுமென அன்புமணி தமது எக்ஸ் தள பதிவில் வலியுறுத்தியிருக்கிறார்.
What's Your Reaction?