ஈடன் கார்டனில் பொழிந்த சிக்ஸர் மழை.. கொல்கத்தாவை வீழ்த்தி சேஸிங்கில் சாதனை படைத்த பஞ்சாப்..

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. 

Apr 27, 2024 - 08:35
ஈடன் கார்டனில் பொழிந்த சிக்ஸர் மழை.. கொல்கத்தாவை வீழ்த்தி சேஸிங்கில் சாதனை படைத்த பஞ்சாப்..

நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் 75 ரன்களும், சுனில் நரேன் 71 ரன்களும் எடுத்தனர். 

இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். ஆரம்பம் முதலே கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சை இருவரும் பதம் பார்த்தனர். 20 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரப்சிம்ரன் சிங் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த ரோசவ் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவுடன், ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியில் 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, ஐபிஎல் மட்டுமின்றி டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி சேஸ் செய்த அதிகபட்ச ரன்கள் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது. 

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோ 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 108 ரன்களுடனும், ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா 18 சிக்ஸர்களும், பஞ்சாப் 24 சிக்ஸர்களும் என மொத்தம் 42 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. ஒரு டி20 ஆட்டத்தின் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow