கள்ளச்சந்தையில் கரன்சி எக்ஸ்சேஞ்ச்... "காலுல விழுறேன்...என்னைய விட்டுருங்க" சென்னையில் சிக்கிய கும்பல்..
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்திற்கு பதிலாக இந்திய ரூபாயை மாற்றிக் கொடுக்கும் கள்ளச்சந்தை கோஷ்டி கையும் களவுமாக சிக்கியுள்ளது.
இந்தியாவில் முக்கியமான விமானநிலையங்களில் சென்னை சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், உள்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளின் செலவுக்கு இந்திய ரூபாய் தேவைப்படும். அதனால், அந்தந்த நாட்டின் பணத்தை விமான நிலையத்திலேயே சந்தை மதிப்பில் மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலைய நுழைவு வாயில்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக சிலர் கரன்சி எக்சேஞ்ச் செய்வது ஜோராக நடைபெற்று வருவது அம்பலமாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை வாசலிலேயே மடக்கி, அவர்கள் நாட்டின் பணத்திற்கு, சந்தை மதிப்பை விட 5 ரூபாய் அதிகம் தருவதாக கூறி கள்ளச்சந்தையில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் கள்ளச்சந்தையில் பல லட்சம் ரூபாய் பணம் கைமாறுவதாக தெரிகிறது.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கரன்சி எக்ஸ்சேஞ்ச் செய்யும் கும்பல் குறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள், வெளிநாட்டு பயணிபோல் நடித்து கரன்சி எக்ஸ்சேஞ்ச் செய்யும் நபருடன் அமெரிக்க டாலரை மாற்ற வேண்டும் எனக் கூறி பேச்சுக் கொடுத்துள்ளனர். 500 ரூபாய் நோட்டுக் கட்டை எடுத்து வைத்த அந்த நபர், 10 ஆயிரம் டாலர் கொடுத்தாலும் அதற்கு பதில் இந்திய பணம் கொடுப்பதாக கூறிய அந்த இடைத்தரகரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு தெரியாமல் செய்தியாளர் வீடியோவாக பதிவு செய்தார்.
இதையடுத்து வீடியோ எடுப்பதை அறிந்த கரன்சி எக்ஸ்சேஞ்ச் கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளது. அவர்களை வீடியோ எடுத்தபடி துரத்தி சென்று பிடித்த செய்தியாளர்களிடம், 100, 50-க்கு கஷ்டப்பட்டு பணப்பரிமாற்றம் செய்ததாகவும், காலில் விழுந்து கும்பிடுறேன் என்னை விட்டுடுங்கனு சொல்லிவிட்டு, பிடிபட்டவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இவர்கள் போல் இன்னும் பல கரன்சி எக்ஸ்சேஞ்ச் கும்பல்கள் சென்னை விமான நிலையத்தில் உலவுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கருப்பு பணத்தை மாற்றவே வெளிநாட்டு பணத்திற்கு சந்தை மதிப்பை விட அதிக பணம் தருவதாக கூறி பணம் மாற்றிக்கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோத பணபரிமாற்றத்தை தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?