உலகக்கோப்பை தோல்விக்கு பழி தீர்ப்பார்களா இளம் சிங்கங்கள்?
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா என இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதால், பிப்ரவரி 11ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் அனல்பறக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இளையோர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) மோதவுள்ளன. அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த தொடரில் விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி வாகையை சூடியுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலிய அணியும் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி மட்டும் கைவிடப்பட்டது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதால், ஞாயிறுக்கிழமை (பிப்.11) நடைபெறும் இறுதிப்போட்டியில் அனல்பறக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இளையோர் உலகக்கோப்பையை இதுவரை இந்தியா 5 முறையும், ஆஸ்திரேலியா 3 முறையும் வென்றுள்ளது.
இது வெறும் போட்டி அல்ல; வரலாற்றில் நமது பெயரை பொறிக்க ஒரு சிறந்த வாய்ப்பு என்று இந்திய அணியின் கேப்டன் உதய் சஹரன் தெரிவித்துள்ளார். அதேபோல், எங்கள் பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பெருமைப்படுத்த இது ஒரு வாய்ப்பு என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஹூக் வெய்பென் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 2012 மற்றும் 2018-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதியுள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. அதற்கு பழி தீர்க்கும் வகையில், இளம் இந்திய வீரர்கள் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மக்களின் இதயங்களை வென்றெடுப்பார்கள் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
What's Your Reaction?