“லீவ் வேணும்னா பொண்ணு செட் பண்ணிக் கொடு” - உதவி கமாண்டண்ட் கோபி சஸ்பெண்ட்
விடுமுறை அனுமதிக்கு பெண்ணை ஏற்பாடு தரச் சொல்லிக் கேட்ட ஐ.ஆர்.பி.என் உதவி கமாண்டன்ட் கோபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் ஐ.ஆர்.பி.என் உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் என்பவர் கடந்த மே மாதம் தனது உதவி கமாண்டன்ட் கோபிக்கு போன் செய்து தனக்கு மருத்துவ விடுப்பு வேண்டும் என கேட்டார். அதற்கு கோபி, உனக்கு விடுமுறை வேண்டும் என்றால் எனக்கு ஒரு பீஸ் (பெண்) ஏற்பாடு செய்து கொடு என்று சந்திரனிடம் கேட்டுள்ளார். அப்படிக் கேட்கும் செல்போன் உரையாடலின் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு காவல் துறை அதிகாரி தனக்குக் கீழ் பணியாற்றுபவருக்கு விடுப்பு வழங்க வேண்டி பாலுறவுக்கு பெண்ணை ஏற்பாடு செய்துத் தரச்சொல்லிக் கேட்பதற்குக் கண்டனங்கள் எழுந்தன. அந்த ஆடியோ வெளியான பிறகு சந்திரனுக்கு பல்வேறான நெருக்கடிகள் தரப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக புகார் ஏதும் அளிக்கக்கூடாது என தனது கணவரை மிரட்டுவதாக சந்திரனின் மனைவி ஆர்த்திஸ்வரி ஐ.ஆர்.பி.என் தலைமைக் கமாண்டரிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து டிஜிபியை சந்தித்து முறையிட வேண்டி அனுமதி கேட்ட ஆர்த்திஸ்வரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி டிஜிபி அலுவலகம் முன்பு ஆர்த்தீஸ்வரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பெண்ணை ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்ட உதவி கமாண்டன்ட் கோபி மீதான புகார் மீது தலைமை கமாண்டன்ட் சுவாதி சிங் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையின் இடையே கடந்த மாதம் கோபி காரைக்காலுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். தற்போது விசாரணை முடிவு பெற்ற நிலையில் உதவி கமாண்டண்ட் கோபியை ஐ.ஆர்.பி.என் தலைமை கமாண்டன்ட் சுவாதி சிங் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?