GSTவரி ரூ.14 கோடி செலுத்தாத ராதிகா...மோடி விட்டு வைத்தது ஏன்? மாணிக்கம் தாகூர் கேள்வி
விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான ராதிகா ஜிஎஸ்டி வரியை முழுமையாக செலுத்தாமல் சுதந்திரமாக நடமாடுவதை பிரதமர் மோடி அனுமதித்தது ஏன் என அதே தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்றுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூர், அதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தனது பிரமாண பத்திரத்தில், சுமார் 6 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு மேலும், அவரது கணவர் சரத்குமார் 8 கோடியே 48 லட்சம் ரூபாய்க்கு மேலும் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
ராதிகா சரத்குமார் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திர புகைப்படத்தை பகிர்ந்து, மோடியின் ஜிஎஸ்டி: சிறு, குறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலால் தத்தளித்து வரும் நிலையில், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் போன்ற பெரிய மீன்கள் ஜிஎஸ்டி வரி நிலுவையுடன் சுதந்திரமாக நீந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரி அமலாக்கத்தில் நேர்மையையும், சமத்துவத்தையும் கொண்டு வர வேண்டும். இதனை இந்தியா கூட்டணி மாற்றும் என பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் ராதிகா சரத்குமார் குறித்து மாணிக்கம் தாகூர் இவ்வாறு பதிவிட்டுள்ளது அரசியல் களத்திலும், தொகுதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?