”எதிர்கட்சியில் துரோகி.. திமுகவில் தியாகியா..” தமிழிசை சௌந்தரராஜன் கடும் தாக்கு
சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார் தியாகி என்று கூறுவதற்கு? என செந்தில் பாலாஜி ஜாமினுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார் தியாகி என்று கூறுவதற்கு? என செந்தில் பாலாஜி ஜாமினுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி (Senthi Balaji) போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் (Money Laundering Case) ஈடுபட்டதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.
பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், சென்னை அறிவாலயம், புழல் சிறை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.
அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இப்பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக தனது கருத்தை பதிவிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், “செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர். எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ? சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார் தியாகி என்று கூறுவதற்கு? INDI... கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல. காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடுமன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக, என கடுமையாக சாடினார்.
மேலும், முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர். 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடுமன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டது மத்திய அரசினால் அல்ல. எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு, எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார். ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை என தெரிவித்துள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.
What's Your Reaction?