போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை.. "குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜாபர் சாதிக்.." வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முதலில் 3 பேர் கைதானதும், ஜாபர் சாதிக் தனது 2 செல்போன்களை உடைத்து தூக்கி எறிந்தார் என்பன உள்ளிட்ட பல அதிர்ச்சி தரும் தகவல்கள் என்.சி.பி. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளுக்கு ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தியதாக கூறப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்ட 5 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
அதில், போதைப்பொருள் கடத்தியதாக முதலில் முஜிபுர், முகேஷ், அசோக்குமார் ஆகியோர் கைதானதும், ஜாபர் சாதிக் தனது 2 ஐபோன்களையும் சென்னை நேப்பியர் பாலத்திற்கு அருகே சென்று உடைத்து தூக்கி வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதன் மூலமாக கிடைக்கும் ஹவாலா பணத்தை, ஜாபர் சாதிக், மணி எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் மூலம் மாற்றியதாக கூறப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு முகமது முஸ்தபா என்பவர் மூலமாக ஜாபர் சாதிக்குடன் பழக்கம் ஏற்பட்டது என இயக்குநர் அமீர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை ஜாபர் சாதிக் தயாரித்ததாகவும், தொடர்ந்து இவருடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதாகவும் அமீர் வாக்குமூலம் அளித்ததாக குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப் பொருட்களை கடத்தியதை ஒப்புக்கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரியை பதிவு செய்து அதை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், டெல்லியில் கைதான 3 பேரிடமும் அவர் செல்போனில் உரையாடியதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என தெரியவந்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?