சித்திரைத் திருவிழாவிற்கு தயாராகும் மதுரை.. மீனாட்சி அம்மன் கோவிலில் 12ல் கொடியேற்றம்
மதுரையில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தத்துடன் துவங்கியுள்ள நிலையில், மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரைத்திருவிழா வாஸ்துசாந்தியுடன் வரும் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது.
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்த மாதம் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி 26 வரைக்கும் சைவமும் வைணவமும் இணைந்து மதுரையில் நடத்தும் திருவிழாவைக் காண பல லட்சம் பேர் மதுரைக்கு வருகை தருவார்கள்.
சித்திரை திருவிழாவிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கள்ளழகர் திருக்கோயில் சார்பில் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் இன்று விழா கோலாகமாக தொடங்கியது.
விழாவையொட்டி ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழி முகத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டகை அமைக்க முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு இன்று வேதமந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட நடைபெற்றது. தொடர்ந்து வண்டியூர் தேனூர் மண்டபத்திலும் இதேபோன்று முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது.
மதுரையில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தத்துடன் துவங்கியுள்ள நிலையில், மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரைத்திருவிழா வாஸ்துசாந்தியுடன் வரும் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது.
தொடர்ந்து, சித்தரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 19ம் தேதி இரவு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், 20ம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயம், 21ஆம் தேதி மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதே போன்று மதுரை தல்லாகுளத்தில் வரும் 22ஆம் தேதி கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 23ஆம் தேதி அதிகாலையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.
ஏற்கனவே மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆரம்ப நிகழ்வாக முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றுள்ள நிலையில் இன்று மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்வுடன் கோலாகல துவங்கியுள்ளது. முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா நிகழ்வினால் மதுரை மாநகரம் விழா கோலம் காண தயாராகி வருகிறது.
இதனிடையே சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர், பானகம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதே போல அழகர் வேடமிட்ட பக்தர்கள் கள்ளழகர் மதுரைக்கு வரும் போதும், வைகை ஆற்றில் இறங்கும் போதும், தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கியது. 20ஆம் தேதி வரை முன்பதிவு நடைபெறுகிறது. அதே சமயம் உயரழுத்த மோட்டார் பம்பு, மின் மோட்டார்கள் ஆகியவற்றின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
What's Your Reaction?