புதிய மின் இணைப்பு.. வசூல் வேட்டை நடத்திய அதிகாரிகள்... ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிரடி உத்தரவு..
புதிய மின் இணைப்புகளுக்கு மேம்பாட்டுக்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் மின் நுகர்வோருக்கு மின் இணைப்பு வழங்க பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, மேல்நிலை கேபிள்கள்(OH)மூலம் ஒரு கிலோவாட் மின் இணைப்பு பெற, மின் நுகர்வோர் மேம்பாட்டுக் கட்டணமாக 2,040 ரூபாயும், நிலத்தடி கேபிள்கள் மூலம் மின்னிணைப்பு பெற, மேம்பாட்டுக் கட்டணமாக 5,110 ரூபாயும் மின்வாரியம் மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் மாநகராட்சி எல்லைகளில் புதிய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்த நுகர்வோரிடமிருந்து, ஒரு கிலோ வாட் மின் இணைப்புக்கு மேம்பாட்டுக் கட்டணமாக, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் மின்வாரிய அதிகாரிகளால் வசூலிக்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன
குறிப்பாக, மேல்நிலை கேபிள்கள் மூலம் மின்னிணைப்பு பெற, நிலத்தடி கேபிள்கள் மூலம் மின் இணைப்புக்கான தொகையை அதிகாரிகள் வசூலிப்பதாகவும், இதுதவிர பல்வேறு காரணங்களை கூறி இதனுடன் கூடுதல் கட்டணங்களையும் வசூலித்து வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து, மின் இணைப்பு வழங்க, அதிக கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக அதிகாரிகளுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மின் இணைப்புக்காக வாங்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை சம்மந்தபட்ட மின் நுகர்வோரின் கணக்கில் திருப்பிச் செலுத்தி, அவர்களின் அடுத்தடுத்த பில் தொகையுடன் அதை இணைத்து சரி செய்து கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த நடைமுறையை உடனடியாக அமல்படுத்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?