திருமணத்தை மீறிய உறவு.. காஜா கடை ஓனரின் கழுத்தை நெரித்த 2-வது மனைவி.. திடுக்கிட்ட திண்டுக்கல்

May 9, 2024 - 17:15
திருமணத்தை மீறிய உறவு.. காஜா கடை ஓனரின் கழுத்தை நெரித்த 2-வது மனைவி.. திடுக்கிட்ட திண்டுக்கல்

திருமணத்தை மீறிய உறவினால் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் திண்டுக்கல் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (54). காஜா கடை உரிமையாளரான இவருக்கு கார்த்திகாமணி (48), செல்வி (35) என்ற 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவதாக, முதல் மனைவி கார்த்திகாமணியே, தன் கணவர் சரவணனுக்கு செல்வியை மணம் முடித்து வைத்துள்ளார். சரவணனுக்கும் செல்விக்கும் 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

முதல் மனைவியை நத்தத்தின் புறநகரில் குடிவைத்துள்ள சரவணன், 2-வது மனைவி செல்வியை பெரிய கடை வீதி அருகே உள்ள சுங்கச்சாவடி தெருவில் காஜா பட்டன் தைக்கும் கடை வைத்துக் கொடுத்து அந்த வீட்டிலேயே தங்க வைத்ததுள்ளார்.

இந்நிலையில் நேற்று (08-05-2024) மதியம் சாப்பிடுவதற்கு முதல் மனைவி கார்த்திகாமணியிடம் வருவதாக கூறிவிட்டு, 2-வது மனைவி செல்வியின் வீட்டுக்குச் சரவணன் சென்றதாக கூறப்படுகிறது. கணவர் சாப்பிட வீட்டுக்கு வரவில்லை என்றதும், அவரை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது தொடர்பு கிடைக்கவில்லை.எனவே நேராக சுங்கச்சாவடி வீட்டுக்கு கணவனை பார்க்க வந்த போது வீடு பூட்டி இருந்துள்ளது. 

இதனால் அக்கம்பக்கத்தினரிடம் கூறி வீட்டை திறந்து பார்த்த போது அங்கு சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரவணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே நத்தத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்ற செல்வியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், வீட்டின் அருகே டீக்கடை நடத்தி வரும் சலீம் என்பவருக்கும், செல்விக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததும், இதனால் ஏற்பட்ட தகராறில் சலீமும், செல்வியும் சேர்ந்து சரவணனின் கழுத்தை வேட்டி மற்றும் துண்டால் இறுக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்வியையும், சலீமையும் கைது செய்த காவல்துறையினர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow