"உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்" - உண்ணாவிரத போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு
தாய் மொழியை மீட்க போராடுவதும், காக்க போராடுவதும் மொழித் தீவிரவாதம் என்றால் அந்த தீவிரவாதத்தை நாங்கள் தொடர்ந்து செய்வோம் - சீமான்
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது மேடையில் உரையாற்றிய சீமான், எனது தாய் மொழியை மீட்க போராடுவதும், காக்க போராடுவதும் மொழித் தீவிரவாதம் என கூறினால் அந்த தீவிரவாதத்தை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு சென்றிருந்தால் அவர் நிச்சயம் அதை நிறைவேற்றி இருப்பார் எனவும், ஆனால் அதனை கொண்டு செல்லாதது திட்டமிட்ட சூழ்ச்சி எனவும் குற்றம் சாட்டினார். நாங்கள் உயிரை கொடுத்து போராடியதற்கே மதிப்பில்லாத போது, உணவின்றி உடலை வருத்திக் கொண்டு போராட வேண்டாம் என்பதே தங்கள் கோட்பாடு என்று கூறினார்.
இதேபோல் வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?